தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
ஆண்டாண்டு காலமாய் அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்கும், உயர்வு எழுச்சிக்கும் போராட வேண்டியது ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையின் வரலாற்றுப் பெருங்கடமையாகும்.
சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்டு, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஆதித்தமிழ்க்குடி மக்களின் ஏழ்மை வறுமை நிலையைக் கருத்திற்கொண்டு அவர்களும் வாழ்வில் உயர்நிலை எய்த வேண்டும் என்ற சீரிய சிந்தனையில், நம்மை அடிமைப்படுத்தி ஆளவந்த ஆங்கிலேயர்களே உன்னத நோக்கத்தோடு ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கிய நிலங்களே பஞ்சமர் நிலங்களாகும்.
நம் நிலத்தை ஆக்கிரமித்து, ஆள வந்த ஆங்கிலேயனே, ஆதித்தமிழ்க்குடி நிலைகண்டு இரங்கி, அவர்களிடம் சிறிதளவு நிலமாவது உடைமையாக இருந்தால்தான் அவர்கள் வாழ்வு சிறக்கும், செழிக்கும் என்று உணர்ந்து வழங்கிய 12 லட்சம் ஏக்கர் பஞ்சமர் நிலங்களை, நமக்குச் சமத்துவம், சமநீதி, சுயமரியாதை பெற்றுத்தருவதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்த, திராவிடக் கொள்ளையர்களின் 60 ஆண்டுகால ஆட்சியில் களவாடப்பட்டதுதான் தமிழினத்திற்கு நேர்ந்த வரலாற்றுப்பெருந்துயரம்.
அதேபோன்று, தமிழர்களை ஏமாற்றி அதிகாரத்தில் அமர்ந்த திராவிட ஆட்சியாளர்கள், சமூக நீதியை நாங்கள்தான் பெற்றுத்தந்தோம், இட ஒதுக்கீட்டை நாங்கள்தான் வாங்கித் தந்தோம் என்றெல்லாம் பேசிப்பேசி தமிழர்கள் நமக்கு முறையாகச் சேர வேண்டிய உரிமையை மறைத்து, மறுத்து வருகின்றனர். சம உரிமையைக் கேட்கும் தமிழர்கள் நமக்குள் பகைத்தீயை மூட்டி, நம்மைப் பிரித்து, பிளந்து அந்தச் சூழ்ச்சியின் பலனாக ஆட்சி அதிகாரத்தைத் தொடர்ச்சியாகத் தக்க வைத்துகொள்கின்றனர்.
எந்தச் சாதியின் அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டதோ, அதே சாதியின் அடிப்படையில் உரிமைகளைப் பெற்றுத்தரக் கொண்டுவரப்பட்டதே இடப்பங்கீடு முறையாகும். சாதிவாரி மக்கள்தொகைக்கு ஏற்ப இடப்பங்கீடு வழங்குவதே உண்மையான சமூகநீதியாகும்.
ஆகவே, எல்லோருக்கும் எல்லாம் சரியாக, சமமாக கிடைக்கச் செய்வதன் மூலம், ஏற்றத்தாழ்வற்ற சமநிலைச் சமூகத்தை உருவாக்கி, உண்மையான சமூகநீதியை நிலைநாட்டிட, 'அள்ளிக் கொடுக்காதே… அளந்துகொடு!’ எடுத்துக்கொடுக்காதே… எண்ணிகொடு!” என்ற உரிமை முழக்கத்தோடும், தமிழர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அபகரிப்பட்ட பஞ்சமர் நிலங்களை மீட்டு ஆதித்தமிழ்குடி மக்களிடம் மீள ஒப்படைக்க ‘பஞ்சமர் நில மீட்பே பைந்தமிழர் உரிமை மீட்பு!',
'ஆதித்தமிழர் விடுதலை இல்லாது; மீதித்தமிழர் விடுதலை வெல்லாது!’ என்ற கொள்கை முழக்கத்தோடும், நடைபெறவிருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பேரெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சி ஓங்குக! இளைய தலைமுறையே தலைமை தாங்குக!
வீறுகொண்டு எழுவோம்! வெற்றி கண்டு மகிழ்வோம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#நாம்தமிழர்_உரிமைப்பேரணி





