முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளின் இனப்பெருக்கக் காலத்தில் முட்டையிட்டுக் குஞ்சுகள்…

0

ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளின் இனப்பெருக்கக் காலத்தில் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரிக்கும் தளமாக விளங்கிய சென்னையின் கடற்கரைப் பகுதியே தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கினால் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் கல்லறையாக மாறியுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த அவலநிலையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கவனத்தில் கொண்டு செயலாற்றிட வேண்டும்.

@mkstalin @Chief_Secy_TN @TThenarasu @moefcc @byadavbjp

அண்மையில் சென்னையின் கடற்கரைகளில் 350 முதல் 500க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்துள்ளன, பல்வேறு ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியும் உள்ளன. ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பருவத்தின் உச்சத்தில் இந்த பெருமளவிலான இறப்பு நிகழ்வு கடற்சூழலியல் பாதுகாப்பில் அரசின் திறனற்ற போக்கினைச் சுட்டிக் காட்டுகின்றது. மீன்பிடி வலைகள், குறிப்பாக கில் வலைகள் மற்றும் இழுவை வலைகளை அதிகமாகப் பயன்படுத்துவதனால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வலைகளில் ஆமைகள் சிக்கிக் கொள்வதனால், அவை நீரில் மூழ்கடிக்கப்படுகின்றன அல்லது கடுமையாகக் காயமடைகின்றன. ஆலிவ் ரிட்லி ஆமைகள் குஞ்சு பொரிக்கும் காலத்தில் கடற்கரைக்கு அருகில் இழுவை வகை வலைகளைக் கொண்டு மீன்பிடிப்பதைத் தடைசெய்து தற்போதைய விதிமுறைகள் இருக்கும்போதிலும், மேலும் வலைகளில் ஆமைகள் வெளிசெல்லும் வகையில் கருவிகள் அமைத்திட வேண்டும் என்ற விதியும் இருக்கும் நிலையில் அவற்றை சரிவர செயல்படுத்தத் தவறிய அரசின் அலட்சியமே இதற்குக் காரணமாகும்.

ஆளும் கட்சிகள் அவர்களின் கட்சித் தலைவர்களுக்குக் கடற்கரைப் பகுதியில் கல்லறை கட்டவும், பேனா சிலை அமைக்கவும், அரங்கங்கள் ஏற்படுத்தவும் ஆர்வம் கொண்டுள்ள நிலையில், அடிப்படை சூழலியல் விழிப்புணர்வும், கடல்வாழ் உயிரினங்கள் மீதான அக்கறையும் இல்லாமால் போனது பேரவலமாகும். தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் இருக்கக்கூடிய படகுகள் குறித்த ஆய்வுகளும், மேற்சொன்ன கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொண்டிருக்க வேண்டிய மீன்வளத்துறை அமைச்சகம் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் வெளியிடாதது அரசின் திறனற்ற நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வானது இது தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், இதுவரை ஏற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் உயிரிழப்பு குறித்து வெளிப்படையான அறிக்கையினை வெளியிடுவதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீதும் கடும் நடவடிக்கையினை எடுக்க வேண்டும். மேலும், வரும் காலங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதோடு, கடற் சூழலியலையும் அழிக்கக்கூடிய திட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

Exit mobile version