நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எருமாடு பகுதியைச் சேர்ந்த பெருமதிப்பிற்குரிய தமிழாசிரியர் ஐயா மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.
தமிழாசிரியராகப் பணியாற்றி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தமிழைப் பிழையின்றி பேசவும் எழுதவும் கற்பித்த பெருந்தகை. தன் வாழ்நாள் முழுவதும் தமிழையே தன் உயிர் மூச்சென கொண்டு அதன் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியவர்.
ஐயாவின் அரும்பணியைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சி – கூடலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அண்மையில் சிறந்த தமிழாசிரியர் விருது வழங்கி சிறப்பித்தது. ஐயாவின் தமிழ்த்தொண்டு என்றென்றைக்கும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கது.
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழாசிரியர் ஐயா மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




