உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாக ஏற்று வாழ்ந்து மறைந்த ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களது வாழ்வானது தமிழிளந் தலைமுறையினருக்கு என்றென்றைக்கும் நற்சான்றாய் திகழும் வரலாற்றுப்பாடமாகும்.
அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு ஓங்கிக் குரல்கொடுத்த ஐயா அவர்கள் தமிழ் இதழியல் உலகில் ஆற்றியப் பங்கு அளப்பரியது. ‘தினத்தந்தி’ எனும் நாளேட்டினைத் தொடங்கி பாமரரும் உலகியலை அறியும் வகையில் எளிய உரைநடையில் செய்திகளை வழங்கி வாசிப்புத்திறனை மக்களிடம் வளர்த்தெடுத்தார். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் எவர்க்கும் அஞ்சாது நெஞ்சுரத்தோடு செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்தார்.
இந்தித்திணிப்புப் போரில் தானும் பங்குகொண்டு அதற்காகவே சிறைப்பட்டார். தமிழில் கையொப்பம் இடுதலையும், கையொப்பத்தின் தலையெழுத்தை தமிழில் இடுதலையும் தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழர்களின் தொன்ம விளையாட்டுகளான கபடி, சிலம்பம் போன்றவைகளை அழியவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்கு அதனைக் கடத்துகிற பெரும்பணியினைத் தனது பேறெனக் கொண்டிருந்தார்.
பரந்து விரிந்த இப்பூமிப்பந்தில் தமிழருக்கென்று ஓர் தேசம் வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையையும், உயரியக் கனவையும் கொண்டு தமிழீழ விடுதலைக்கு ஆதரவாய் குரலெழுப்பிய தலைசிறந்த ஆளுமைகளுள் ஐயா அவர்கள் முதன்மையானவராவார்.
ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்கள் சாதி, மதச் சகதிகளுக்கிடையே சிக்குண்டிருந்த தமிழர்களை மீட்டெடுத்து ‘நாம் தமிழர்’ எனும் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பினார். காலச்சூழலில் அவ்வியக்கத்தைத் தொடரமுடியாது போனபோது, ‘வழிவழியே வருகிற தமிழ்த்தலைமுறைப் பிள்ளைகள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்!’ என்று தமது ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த இலட்சிய நெருப்பினைத் தொலைநோக்கு பார்வையோடு அன்றே பேரறிவிப்பும் செய்தார். அவர் சொல்லியபடியே வழிவழி வந்த மானத் தமிழ்ப்பிள்ளைகள் அவர் காட்டிய வழியில் இன்றைக்குத் தடம் மாறாது பெருமிதத்தோடு பயணிக்கிறோம்.
ஐயா அவர்களின் நினைவைப் போற்றுகிற இந்நாளில் இன விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய இடையறாது, அயராது பாடுபடுவோம் என உறுதியேற்போம்!
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு நம்முடைய புகழ்வணக்கத்தை செலுத்துவோம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி




