தமிழீழ விடுதலைப்போராளி, பெருமதிப்பிற்குரிய ஐயா ஈழவேந்தன் (எ) கனகேந்திரன் அவர்கள் கனேடிய நாட்டில் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஈழத்தாயகத்தின் மீதான பற்றின் காரணமாக தமது வங்கி அதிகாரிப்பணியைத் துறந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, தம் வாழ்வையே அதற்கென அர்ப்பணித்த பெருந்தகை ஐயா ஈழவேந்தன் அவர்கள்.
நீண்ட காலம் தமிழ்நாட்டில் தங்கி, தமிழீழ விடுதலைக்கு தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டிய பெருமைக்குரியவர். கடந்த 2000ஆம் ஆண்டில் அன்றைய பாஜக-திமுக கூட்டணி அரசால் ஐயா ஈழவேந்தன் அவர்கள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டப்போதிலும், விடுதலைப் புலிகளின் ஆதரவுப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தலில் நின்று வென்று, தமிழீழ விடுதலைக்குரலாக இலங்கை நாடளுமன்றத்திற்குள் ஓங்கி ஒலித்த புகழுக்குரியவர். இலங்கை இனவாத அரசு ஐயா அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்து, நெருக்கடி கொடுத்ததன் காரணமாகப் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ நேரிட்டபோதும், அங்கும் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு திரட்டி, பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வாழ்வின் இறுதிவரை சமரசமற்ற போராளியாகவே திகழ்ந்த மாமனிதர்!
ஐயா அவர்களின் புகழ் ஈழத்தாயக வரலாற்றில் என்றும் நன்றியுடன் நினைவு கூறப்படுவார்.
ஐயா ஈழவேந்தன் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா ஈழவேந்தன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




