முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறையோன், முப்பாட்டன் முருகப்…

0

தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறையோன், முப்பாட்டன் முருகப் பெருமான் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகத் திருநாள் இன்று!

ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல் என வாழ்வியல் கூறுகள் வழி மொழி தந்த தொன்ம இலக்கியம் என யாவும் பெற்று புவி மாந்தரில் கோலோச்சிய இனம் தொல்தமிழ்ப் பேரினம். அத்தகைய பண்பாட்டு செழுமைமிக்க தமிழினத்திற்கு தனித்த பெருமையுடைய இறையோனும் இருக்கிறார். அவரே தமிழர் இறையோன் நமது மூதாதை முருகப் பெருமான் ஆவார்.

'பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்' என்று கலித்தொகை காட்டும் முதுமொழியின்படி தொல்தமிழர் தங்கள் வாழ்வியல் பாடுகளின் மூலம் பெற்ற பண்பட்ட அனுபவங்களே தமிழர் பண்பாடாகியது. அப்படி நமது
மூத்தோர் வழி பயணப்படுவது, மூத்தோர் வழி பாடுபடுவதே தனித்துவமிக்க தமிழர் மெய்யியல் வழிபாடாகும்.

அத்தகைய தமிழர் மெய்யியல் பண்பாட்டு நிகழ்வு மேலும் சிறப்புறும் வகையில் திருமுருக வழிபாட்டுத் திருநாளான தைப்பூச பெருவிழாவினை உலகெங்கும் தமிழர்
வாழும் நிலங்களில் எல்லாம், தமிழர் குடும்பங்களில் எல்லாம் கொண்டாடி தமிழ் இறையோன் குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகப் பெருமானை வணங்கிப் போற்றுவோம்.

உலகத் தமிழர் அனைவருக்கும் அருள்நிறை அன்புடன் திருமுருகத் திருநாள் வாழ்த்துகள்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version