வீட்டுக்கொரு மரம்!
—————–
வளர்க்க வேண்டியதையெல்லாம் வளர்த்தாகிவிட்டது
மரம் தான் பாக்கி;
மரம் வளருங்கள்!
காட்டில் வளர்ந்ததை அவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள்;
எனவே இனி வீட்டில் வளருங்கள்!
வீடே இல்லையே என்கிறீர்களா?
அப்படியென்றால் அவசியம் மரம் வளருங்கள்!
அதனடியிலேயே குடியிருக்கலாம்!
பிள்ளைகளை வளர்த்தால் சோறு கேட்பார்கள், வேலை கேட்பார்கள்
எனவே மரம் வளருங்கள்!
வீட்டுக்கொரு ஆண்மகன் வளர்ந்தால் போராட வருவான்.
இது அகிம்சை நாடு
எனவே மரம் வளருங்கள்!
வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி அவர்களை வளர்த்தீர்கள்
அவர்கள் காட்டில் மழை பெய்கிறது!
நீங்கள் காய்ந்து போனீர்கள்!
அவர்களுக்கு வாங்கும் கரங்கள்!
மரங்களுக்குக் கொடுக்கும் கரங்கள்!
அவர்கள் வெயிலைத் தருவார்கள்;
மரங்கள் நிழலைக் கொடுப்பவை;
எனவே இனியாவது மரங்களை வளருங்கள்!
அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் வளர்ப்பார்கள்;
உங்களுக்கு மரம்தான்; எனவே மரம் வளருங்கள்! என்றாவது ஒருநாள் உங்களுக்குச் சூடுசொரணை வந்தால் தடிகள் செய்யலாம்!
அதனால்தான் சொல்கிறேன் மரங்களை வளருங்கள்!!
– கவிக்கோ அப்துல் ரகுமான்



