முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கரூர் பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் முன்வைத்ததற்காக அண்ணன்…

1

கரூர் பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் முன்வைத்ததற்காக அண்ணன் நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடுப்பதா?

@CMOTamilnadu @TVKVijayHQ

கரூரில் நடைபெற்ற பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் தெரிவித்ததற்காக நக்கீரன் இதழின் ஆசிரியரும், மூத்தப் பத்திரிக்கையாளருமான அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் மீது வழக்குத் தொடுத்திருக்கும் தவெக அரசின் செயல் குடிமகனின் அடிப்படை சனநாயக உரிமையானக் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் கொடுஞ்செயலாகும். மாற்றுக்கருத்துத் தெரிவிப்போர் மீது வழக்குத் தொடுத்து அச்சுறுத்துவதும், எல்லாவற்றிற்கும் எடுத்த எடுப்பிலேயே கைதுநடவடிக்கையைப் பாய்ச்சுவதுமானப் போக்கு கண்டனத்திற்குரியது.

கரூர் கோர விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒன்றியப் புலனாய்வு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் காவல்துறையினர் மக்களைக் கொன்றுகுவித்தனர் என மனம்போன போக்கில் வாய்க்கு வந்ததைத் துளியும் பொறுப்புணர்வின்றிப் பேசும்போது வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசு, ‘எங்கள் தேசம்’ வலையொளியின் நேர்காணலில் அண்ணன் கோபால் அவ்விபத்து குறித்த தனது கேள்விகளையும், ஐயங்களையும் முன்வைத்ததற்கே வழக்குத் தொடுப்பது வெளிப்படையான அச்சுறுத்தலின்றி, வேறில்லை. இதுவெல்லாம் பாசிச வெறியாட்டத்தின் தொடக்க நிலையாகும். இதனைக் கடுமையாக எதிர்க்கிறேன்.

ஆகவே, அண்ணன் நக்கீரன் கோபால் மீது தேவையற்று தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், கருத்துரிமைக்கு எதிரான கொடுங்கோல்போக்கைக் கைவிட வேண்டுமெனவும் தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version