இரத்து செய்யும் அளவிற்கு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள குரூப்-2 தேர்வு, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய Group–2 தேர்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்ந்து மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 828 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று நடைபெற்ற குரூப் – 2 தேர்வு, அரசு தேர்வாணையத்தின் குளறுபடிகளால், தேர்வர்கள் பெரும் இன்னலுக்கு ஆளான நிலையில் தேர்வையே முழுமையாக இரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது பெருங்கொடுமை.
தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள்களின் பதிவெண்கள் மாறியிருந்ததால் குழப்பம் ஏற்பட்டு, தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, பின் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்பட்ட குளறுபடிகளால் மாணவர்கள் மிகுந்த பதட்டத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி தேர்வு எழுத முடியாத அசாதாரண சூழலும் தேர்வாணையத்தின் அலட்சியத்தால் உருவானது. அதுமட்டுமின்றி சில மாணவர்களுக்கு முன்கூட்டியும், பல மாணவர்களுக்கு மிகத் தாமதமாகவும் வினாத்தாள் வழங்கப்பட்டதால் தேர்வின் சமநிலை என்பது முற்றாகச் சீர்குலைந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் – 2 முதல்நிலைத்தேர்வு, இதே போன்று தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளால் நடைபெற்றதால், கடும் கண்டனம் எழுந்த பிறகு இரத்து செய்யப்பட்டது. அதன் பிறகாவது திமுக அரசும், தமிழ்நாடு அரசுத் தேர்வாணையமும் விழிப்புற்று, முழுமையான பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் இப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டிருக்காது.
தொடர்ச்சியாக திமுக அரசு தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது பெருங்கொடுமையாகும். இரவு பகல் பாராது, கண்துஞ்சாது படித்து, தங்களின் கடின உழைப்பைச் செலுத்திய தமிழ்நாட்டு தம்பி-தங்கைகளின் அரசுப்பணி கனவினை சுக்கு நூறாக்கியுள்ள திமுக அரசு, அவர்களது குடும்பத்தையும் மீளா வறுமை சூழலில் தள்ளியுள்ளது. வெற்று விளம்பரங்களுக்கும், வீண் ஆடம்பரங்களுக்கும் தரும் முக்கியத்துவத்தை நிர்வாகப் பணிகளை சரியாகச் செய்வதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் திமுக அரசு காட்டத்தவறுவது ஏன்? மக்கள் நலனை பாதுகாப்பதே மக்களாட்சியின் மகத்தான மாண்பாகும். அதனை செய்யத்தவறிவிட்டு, கோடிகளை கொட்டி நல்லாட்சி செய்வதாக விளம்பரம் செய்தால் அதனால் நாட்டு மக்கள் அடைந்த நன்மை என்ன? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!
நிர்வாக திறமையின்மை மற்றும் பொறுப்பின்மை காரணமாக
தமிழிளந்தலைமுறையின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக அரசின் அலட்சியப்போக்கிற்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி





