முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி – நம்புதாளை மீனவ மக்களின் நெடுநாள்…

0

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி – நம்புதாளை மீனவ மக்களின் நெடுநாள் கோரிக்கையான படகுகளைக் கட்டி நிறுத்துவதற்கான தளத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு அமைத்துத் தர வேண்டும்!

@CMOTamilnadu @mkstalin

இராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 17 வயதேயான அன்புமகன் தொண்டீஸ்வரன் கடந்த 24.11.2025 அன்று புயலின் தாக்கத்திலிருந்து படகைக் காப்பதற்காக கடலில் இறங்கிச் சென்றபோது காற்று வேகமாக வீசியதாலும், அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். உயிரிழந்த தொண்டீஸ்வரன் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

நம்புதாளை கிராம மக்கள் பல ஆண்டுகாலமாக கோரி, போராடி வரும் ஆற்றுவாய் கால்வாயை, தூர்வாரி சுத்தப்படுத்திப் படகுகள் கட்டுவதற்கான தளம் அமைக்காததே அன்புமகன் தொண்டீஸ்வரன் மரணிக்க முதன்மைக் காரணமாகும். திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

நம்புதாளை படகுகள் கட்டப்படும் ஆற்றுவாய் கால்வாய் நெகிழிக் கழிவுகளால் தூர்வாரப்படாமல் மிக மோசமான நிலையில் உள்ளது. அதனைத் தூர்வாரி படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவான இடமாக சரி செய்து விட்டால் மீனவர்கள் படகை நிறுத்துவதற்கும் மீன்பிடிப்பதற்கும் ஏதுவாக கால்வாய்ப் பயன்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை இயக்குநரிடம் நம்புதாளை மக்கள் தொடர்ந்து மனு அளித்த நிலையில், நாம் தமிழர் கட்சியும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தது. அதுமட்டுமின்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து (https://t.co/299F8leQ45.20116/24) ஆற்றுவாய்க் கால்வாயை தூர்வார உத்தரவும் பெற்றது. ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆற்றுவாய்க் கால்வாய் சுத்தப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது டிட்வா புயல் வந்ததால் படகு கட்டுவதற்கு ஏதுவான வசதியில்லாத காரணத்தினாலேயே அன்புமகன் தொண்டீஸ்வரன் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

ஆகவே, அரசின் அலட்சியத்தால் பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்து வறுமையில் வாடும் தொண்டீஸ்வரன் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். மேலும், இனியும் இதுபோன்று அநியாயமாக மீனவர் பெருமக்கள் உயிரிழப்பதை திமுக அரசு வேடிக்கை பார்க்காமல், உடனடியாக உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தித் நம்புதாளை கிராமத்திற்கு, புயல் வெள்ளம் போன்ற காலங்களில் படகுகளைக் கட்டி நிறுத்துவதற்கான ஆற்றுவாய் கால்வாயைத் தூர்வாரி சுத்தப்படுத்தி, படகுகள் கட்டுவதற்கான தளம் அமைத்துத்தர வேண்டும்.

அதுமட்டுமின்றி, மன்னார் வளைகுடா கடல் பகுதி மீனவ கிராமங்களான தொண்டி, புதுக்குடியிருப்பு, நம்புதாளை, சோழியகுடி, லாஞ்சியடி, புதுப்பட்டினம், காரங்காடு, முள்ளிமுனை, மோர்பண்ணை, திருப்பாலைக்குடி தேவிபட்டினம், பழனிவலசை, சித்தார்கோட்டை. இரணியன் வலசை, உச்சிப்புளி, மண்டபம் உள்ளிட்ட கடற்கரை மீனவ கிராமங்களில் இயற்கையாக இருந்த ஆற்றுவாய் பகுதிகள் முறையான பராமரிப்பு இன்மை மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாகச் சேதமடைந்ததால், புயல், பெருமழை காலங்களில் மீனவர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். ஆகவே, தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை மூலம் ஒவ்வொரு மீனவக் கிராமத்திலும் உள்ள ஆற்றுவாய் கால்வாய்களை சுத்தப்படுத்தி, படகுகள் கட்டுவதற்கு ஏற்ற தளம் அமைத்துத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version