மூவேந்தரும் போய், முச்சங்கமும் போய்ப், பாவேந்தருங் குறைந்துபழைய நூலுரைகளும் மறைந்து, படிப்பாரும் கேட்பாரும் இன்றிதமிழ்த்தாய் தளர்ந்து மெலிந்த காலத்தில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி அன்னைத் தமிழ் காத்த அருந்தமிழ்ச்செல்வர்..!
வறுமையில் வாடிய பைந்தமிழ் புலவர்களை ஆதரித்து பரிசில் பல தந்ததுடன், தமிழ்த்தாத்தா உ.வே.சா, சைவப் பேரறிஞர் தாத்தா ஆறுமுக நாவலர், தாத்தா சிங்காரவேலு உள்ளிட்ட தமிழறிஞர்களின் நூற்பதிப்பு பணிக்குப் பொருளுதவி புரிந்த வள்ளல்..!
செந்தமிழ்க் கலாசாலை என்ற தமிழ்க் கல்லூரி நிறுவியும், பாண்டியன் நூலகம் மற்றும் தமிழ் ஆய்வு மையம் அமைத்தும், செந்தமிழ் இதழ் நடத்தியும்,செழுந்தமிழ் நூல்களை இயற்றியும், தொகுத்தும், பதிப்பித்தும் தாய்த்தமிழை வளர்த்த தன்னிகரில்லா தமிழறிஞர்..!
கப்பலோட்டிய பெருந்தமிழர் பாட்டன் வ.உ.சி அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவிய தாயகப் பற்றாளர்..!
நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி நற்றமிழ் வளர்த்த செந்தமிழ்ச் செம்மல் நம்முடைய பாட்டனார் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!




