மாலி நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
மாலி நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த 5 தமிழர்களை அந்நாட்டுப் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திய செய்தி அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கின்றது. கடத்தப்பட்ட தமிழர்களை மீட்க இந்திய ஒன்றிய – தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது.
குடும்ப வறுமை காரணமாக மேற்கு ஆப்ரிக்க நாடான மாலி நாட்டிற்குப் பணிக்குச் சென்ற தென்காசி மாவட்டம், கடையநல்லூர், முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, கண்மணியாபுரத்தை சேர்ந்த தளபதி சுரேஷ், மற்றும் துாத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் புதியவன், நாரைகிணறு பொன்னுதுரை, வேப்பங்குளம் பேச்சிமுத்து உள்ளிட்ட 5 தமிழர்களை முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றதால், அவர்களின் குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கடத்தப்பட்டு 5 நாட்களாகியும், கடத்தப்பட்டவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் இதுவரை தொடர்புகொள்ள முடியாததால், அவர்களின் நிலை என்னவென்று அறியாது குடும்பத்தினர் தவித்துப்போயுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசின் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலமுறை புகாரளித்தும் கடத்தப்பட்ட தமிழர்களை மீட்க எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்துவது அவர்களின் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி, வறுமையில் வாடும் ஆப்ரிக்காவின் மாலி நாட்டிற்கு பிழைப்பு தேடி செல்லும் நிலைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை தள்ளியதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இரட்டை இலக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), பொருளாதாரத்தில் இரு மடங்கு வளர்ச்சி, பல்லாயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு, பல இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்றெல்லாம் வெற்று விளம்பரம் செய்த திமுக ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் இதுதானா?
மூன்று இலட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதி என்னானது? அதனை திமுக அரசு நிறைவற்றியிருந்தால் இத்தகைய இழிநிலை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்குமா? உயிருக்கு ஆபத்தான மாலி நாட்டிற்கு வேலை தேடி செல்லும் நிலைக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களை ஆளாக்கியதுதான் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சாதனையாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் மூலமும், இந்திய ஒன்றிய அரசு வெளியுறவுத்துறை மற்றும் மாலியில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமும் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


