முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னையில் இயங்கி வரும் ‘லிட்டில் டிராப்ஸ்’ ஆதரவற்ற முதியோர் இல்லத்தை…

0

சென்னையில் இயங்கி வரும் ‘லிட்டில் டிராப்ஸ்’ ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்க திமுக அரசு முயல்வது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயல்!

@CMOTamilnadu
@mkstalin

சென்னை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பந்தாங்கல் பரணிபுதூர் கல்லூரி சாலையில் இயங்கிவரும் ‘லிட்டில் டிராப்ஸ்’ ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடித்துவிடுவேன் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிரட்டல் விடுக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அன்பின் திருவுருவம் அன்னை தெரசா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுக் கடந்த 35 ஆண்டுகளாக இயங்கிவரும் ‘லிட்டில் டிராப்ஸ்’ ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தற்போது 400க்கும் முதியோர்கள் பயன்பெற்று வரும் நிலையில், அதனை இடித்துவிடுவேன் என்று திமுக அமைச்சரே நேரில் சென்று மிரட்டல் விடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஆதரவற்ற முதியோர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து, எவ்வித குறையுமின்றி அரவணைக்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையாகும். ஆனால், திராவிட மாடல் திமுக அரசு அதனைச் செய்யத்தவறியதோடு, தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வரும் ஆதரவற்ற முதியோர்களை அரவணைக்கும் அரும்பணியையும் முடக்க முயல்வது வெட்கக்கேடானது.

கடந்த 35 ஆண்டுகளில் ஏறத்தாழ 10,00க்கும் மேற்பட்ட முதியோர்களை ஆதரித்து அரவணைத்த ‘லிட்டில் டிராப்ஸ்’ முதியோர் இல்லம் நகரின் முதன்மையான இடத்தில் அமைந்திருப்பதால் அதனை எப்படியாவது இடித்துவிட்டு, அவ்விடத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடனேயே இத்தகைய முயற்சிகளில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஈடுபடுவதாக முதியோர் இல்லப் பொறுப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், முதியோர் இல்லத்தைச் சுற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்துள்ள தனியார் கட்டுமான பெருநிறுவனம், முதியோர் இல்லத்தை இடித்து அதன் வழியாகக் கழிவுநீர் கால்வாய் அமைக்க முயல்வதாகவும், அதற்கு அமைச்சர் துணைநிற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பெருமுதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக, தன்னலமற்று தொண்டு புரியும் முதியோர் இல்லத்தை முடக்குவதற்குப் பெயர்தான் திராவிட மடலா? என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே, தனியார் கட்டுமான பெருநிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கைவிட்டு, ‘லிட்டில் டிராப்ஸ்’ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version