சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின்
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், என் பாசத்திற்குரிய தம்பி பழ.வெற்றிநிலவன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தமிழ் மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, தமிழ்த்தேசியத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீதும் அளப்பரிய பற்று கொண்டு, நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு களமாடிய தம்பியின் திடீர் மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத மனவலியைத் தருகிறது.
என் மீது கொண்ட பேரன்பினால் மிகவும் வேண்டி விரும்பித் தன்னை பாதுகாப்பு படையில் இணைத்துக்கொண்டு, விழி காக்கும் இமைபோல, செல்லும் வழி தோறும் பாதுகாப்பு பணியில் முன் நின்ற என் அன்புத்தம்பியின் மறைவு, தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை பயணம் முழுதும், ஓய்வு உறக்கமின்றி, கடமை தவறாது, மிகுந்த பொறுப்புணர்வோடு பாதுகாவல் பணி செய்த பேரன்பாளன் தற்போது நம்முடன் இல்லை என்பதையே மனம் ஏற்க மறுக்கிறது. தீரமும், வீரமும் ஒருங்கே கொண்டு, எதற்கும் அஞ்சா நெஞ்சுரத்துடன்,
ஒழுக்கமும், கண்ணியமும், அளப்பரிய செயல்திறனும் கொண்ட ஆற்றல் மறவனின் திடீர் மறைவு இதயத்தை கனக்கச் செய்கிறது.
அன்புத்தம்பி பழ.வெற்றிநிலவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர்ச் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி பழ.வெற்றிநிலவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




