தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தை நிறுவிய பேரறிஞர், தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர், தொல்லியல் ஆய்வாளர், வரலாற்று அறிஞர், போற்றுதற்குரிய பெருந்தமிழர் ஐயா நடன.காசிநாதன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் கல்வெட்டாளராகப் பணியைத் தொடங்கிய ஐயா அவர்கள், கல்வெட்டுகள் ஆய்வுகள், தொல்பொருள் அகழாய்வுகள், வரலாற்றுக் கருத்தரங்குகள் ஆகியவற்றில் பெரும் பங்காற்றியதோடு, தொல்பொருள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியதில் முதன்மையானவராவார். ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற்ற ‘பூம்புகார் ஆழ்கடல் ஆய்வு’ தமிழர் வணிக வரலாற்றை வெளிக்கொணர்ந்த பெருநிகழ்வாகும்.
மேலும், ஐயா நடன.காசிநாதன் அவர்கள் தமிழர் பண்பாடு, வாழ்வியல் குறித்து களப்பிரர், தொல்லியல் புதையல், தமிழர் காசு இயல், தமிழர் தெய்வங்கள், காலச்சுவடுகள், கல்வெட்டின் கதை, தமிழகத்தில் தொல்மாந்தர் பண்பாடு, தமிழர் பண்பாட்டுச் சிதறல்கள், தமிழக வரலாற்றுத் தடயங்கள், தமிழகச் சிற்பிகள் வரலாறு, சோழர் செப்பேடுகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆய்வு நூல்களைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதோடு, பல நூல்களைப் பதிப்பித்த பெருமைக்கும் உரியவர் ஆவார்.
ஐயா நடன.காசிநாதன் அவர்களின் மறைவு தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். ஐயா அவர்களை இழந்துவாடும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தொல்லியல் ஆர்வலர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தொல்லியல் பேரறிஞர் ஐயா நடன.காசிநாதன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




