‘பெரும்புலவர்’ ஐயா இலக்குவனார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!

9

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்!

அதுநாள்வரை தமிழ்நாடெங்கும் ‘மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப்பதிவை அன்னைத்தமிழில் ‘உளேன் ஐயா!’ என்று உரக்கச் சொல்லவைத்த பெருமகன்!

சங்கப்பாடல்களை முதன்முதலாக சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி!

தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும், மொழிப்பற்றும் ஊட்டி தன்னந்தனியனாக ஒரு தலைமுறையையே மானத்தமிழர்களாக வளர்த்தெடுத்த பெருந்தகை!

மாணவர்களிடம் தாய்த்தமிழ்ப் பற்றை ஊட்டுகிறார் என்ற காரணத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடம் மாற்றி அலைக்கழித்தது அன்றைய காங்கிரசு அரசு! ஆனால், அதையே வாய்ப்பாக்கிக்கொண்டு, செல்லும் இடமெல்லாம் இந்தி திணிப்புக்கு எதிராக இளந்தமிழ் தலைமுறையினரிடம் தமிழ்ப்நெருப்பைப் பற்ற வைத்த புரட்சியாளர்!

நா.காமராசன், க.காளிமுத்து, கவிஞர் இன்குலாப், பா.செயப்பிரகாசம் என 1965ஆம் ஆண்டு நிகழ்ந்த மூன்றாம் மொழிப்போரின் முதன்மை தளபதிகளாக முன்னின்றவர்கள் பலரும் ஐயா இலக்குவனார் மூட்டிய புரட்சித்தீயில் பூத்த அவரின் மாணவச்செல்வங்களே!

அன்னைத்தமிழைப் பயிற்சி மொழியாக்க மறுத்து ஆங்கிலத்திற்குத் துணைநின்ற திமுக கல்வி அமைச்சரைக் கண்டித்து, அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்ட மாநிலக்கல்லூரி தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் பணியினை, தன்மானத்துடன் தூக்கி எறிந்த தமிழ்மறவர் நம்முடைய ஐயா இலக்குவனார் அவர்கள்!

மொழிப்போரை முன்னின்று நடத்தியதற்காகச் சிறையேகிய ஈகி, பெரும்புலவர் ஐயா இலக்குவனார் அவர்களின் புரட்சிகரப் பெருவாழ்வினை போற்றுகின்ற இந்நாளில் அவர் கற்பித்த வழிநின்று ‘தமிழ் மொழியையும், மண்ணையும் விழியென காப்போம்’ என உறுதியேற்போம்!

‘மொழிப்போரை முன்னின்று நடத்திய பெரும்புலவர்’ ஐயா இலக்குவனார் அவர்களுக்கு நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

#நாம்தமிழர்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி