முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆனி23 (07-07-2025) | ஆதித்தமிழர் எழுச்சிநாள் தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு…

0

ஆனி23 (07-07-2025) | ஆதித்தமிழர் எழுச்சிநாள்

தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்கள்!

“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்!

வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று என்று கற்பித்த பெருந்தகை..!

தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் எழுதிய தன் வரலாறு புத்தகத்தில், லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பங்கெடுக்கச் சென்றபோது, இங்கிலாந்து ராணி தன்னைச் சரிசமமாக அமர்த்தி உணவு பரிமாறினார்கள் என்பதை நெகிழ்வுடன் பதிவு செய்திருக்கிறார். இது போன்ற நிகழ்வு எங்கள் மண்ணில் நடக்காது என்று ராணியிடம் தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். நானூறு பேர் படித்த இடத்தில் தான் மட்டும்தான் ஆதித்தமிழ்க்குடி என்றும், விளையாட்டில் ஆர்வம் இருந்தும், யாரும் விளையாட தன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், அதனால் திடலின் ஓரத்தில் நின்று மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பேன் என்று நம்முடைய தாத்தா கண்ணீருடன் பதிவு செய்துள்ள வார்த்தைகளில் உள்ள வலியை ஒரு நிமிடம் நாம் உள்வாங்கி, தமிழர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒன்றுபட்ட தமிழ்ச்சமுதாயமாகத் திகழந்திட அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் அயராது பாடுபட வேண்டும். அவர்காட்டிய சமத்துவ வழியில் பயணிக்க வேண்டும் என்ற உறுதியோடுதான், தமிழ்த்தேசிய அரசியல் என்ற தன்னிகரில்லா தத்துவத் தடம்பற்றி, நாம் தமிழர் கட்சி என்ற புரட்சிகர அரசியல் படையைக் கட்டமைத்து, இனவிடுதலை என்ற உயர்ந்த இலட்சிய இலக்கினை நோக்கி நாம் பயணப்பட்டு வருகிறோம்.

அதன் காரணமாகவே தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்தநாளினை "ஆதித்தமிழர் எழுச்சிநாள்" என இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நாம தமிழர் கட்சி சார்பாக கொண்டாடுவோம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க அறிவிப்பையும் வெளியிட்டுள்ளோம்!

தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்த நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

ஆதித்தமிழர் எழுச்சி நாளில் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version