தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ் மன்னராகிய வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அங்கீகரிக்கும் பன்னாட்டு அமைப்பான யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களுக்கு சொந்தமான செஞ்சி கோட்டையை மராத்தியர்களின் கோட்டையாக மாற்ற மராத்திய மாநில அரசு முயல்வதும், அதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இவ்வரலாற்று திரிபை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு சிறிதும் உணர்வற்று வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
செஞ்சிக்கோட்டை தொல்தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய சொத்தாகும். யாராலும் எளிதில் கைப்பற்ற முடியாத அதன் அமைவிட சிறப்பால், மூவேந்தர்களின் ஆட்சிக்காலத்தியே செஞ்சிக்கோட்டை புகழ்பெற்று விளங்கியது. சோழ மன்னர்களின் அவைப்புலவரான ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா நூலில், “கடியரணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும்” என்ற பாடல் வரிகள் மூலம், ‘வலிமையான மதில்களை கொண்ட கோட்டைகளையும், வலிய போர் யானைகளையும் கொண்டவன் மன்னர் செஞ்சியர்கோன் காடவன்’ என்று வியந்து பாடுகிறார்.
சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த காடவன் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் இராஜராஜ சோழனை சிறை பிடித்து, செஞ்சியை அடுத்த அன்னமங்கலம் எனும் ஊரின் மலைக்குகையில் சிறை வைத்த வரலாற்று நிகழ்வுகள், அக்குகையில் காணப்படும் சிற்பத்தின் மூலமும், அங்கு பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் மூலமும் அறியமுடிகிறது. வயலூர் கல்வெட்டும் அவ்வரலாற்றுச் செய்தியை உறுதிப்படுத்துகிறது.
செஞ்சி கோட்டையை கி.பி.1190 முதல் மன்னர் ஆனந்தகோனும், கி.பி.1240 முதல் மன்னர் கிருஷ்ணகோனும், கி.பி.1270 முதல் மன்னர் கோனேரிக்கோனும் அதன் பிறகு அவருடைய வாரிசுகள் மன்னர் கோவிந்தகோன், மன்னர் வலியகோன், மன்னர் கோட்டியலிங்ககோன் ஆகியோர் தொடர்ச்சியாக ஆண்ட மிக நீண்ட வரலாற்றை உடையது. அதன் பிறகு, வரலாற்றின் போக்கில் செஞ்சி கோட்டை விசயநகர நாயக்கர்கள், மராட்டியர், முகலாயர், ஆற்காடு நவாப்புகள், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறி மாறி இருந்து வந்துள்ளது. நாயக்க மன்னரிடமிருந்து செஞ்சியை பிஜப்பூர் சுல்தான் கி.பி.1649இல் கைப்பற்றினார். 28 ஆண்டுகள் பிஜப்பூர் சுல்தான் ஆட்சிக்கு பிறகு 1677ஆம் ஆண்டுதான் மராத்திய மன்னர் சிவாஜி செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றி, தன்னுடைய அரசுடன் இணைத்துக் கொண்டார்.
1698இல் செஞ்சிக்கோட்டை முகலாயர் வசம் வந்தது. முகாலய மன்னர் ஔரங்கசிப், செஞ்சி கோட்டையின் தலைவராக ராஜபுத்திரரான சரூப்சிங்கை நியமித்தார். 1714இல் சரூப்சிங் இறந்த பிறகு பட்டத்திற்கு வந்த அவருடைய மகன் தேசிங்கு, ஆற்காடு நவாப் உடனான போரில் வீரமரணம் அடைந்ததால், செஞ்சிக்கோட்டை ஆற்காடு நவாப் ஆளுகையின்கீழ் வந்தது. அதன்பிறகு செஞ்சிக் கோட்டையானது பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறிமாறி இருந்துவந்த நிலையில், 1780இல் ஐதர் அலி செஞ்சிக்கோட்டையை கைப்பற்றினார். இறுதியாக 1799இல் கோட்டை ஆங்கிலேயர் வசம் போனது.
மராத்தியர்கள் செஞ்சிக்கோட்டையை ஆண்டது வெறும் 22 ஆண்டுகள் மட்டுமே. அதிலும் 8 ஆண்டுகள் செஞ்சிக்கோட்டை முகலாயர்களின் முற்றுகையில் இருந்தது. மராத்தியர்கள் செஞ்சிக்கோட்டையில் வலுவான கட்டுமானங்கள் மேற்கொண்டதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. மராத்தியரை விடவும் அதிக ஆண்டுகள்
செஞ்சிக்கோட்டையை நாயக்கர் மன்னரும், ஆற்காடு நவாபும், பீஜபூர் சுல்தானும், முகலாயரும், ஆங்கிலேயரும் மாறி மாறி படையெடுத்து வந்து ஆண்டுள்ளனர். ஆனால், உண்மையிலேயே செஞ்சிக்கோட்டையானது தலைமுறை தலைமுறையாக அம்மண்ணை ஆண்ட பூர்வகுடி தமிழ் மன்னர்களாகிய கோனேரிக்கோன் முன்னோர்களுக்கு சொந்தமானது என்றே வரலாற்றில் பதிய வேண்டும்.
செஞ்சியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோட்டை அமைந்துள்ளது. மூன்று மலைகளை இணைத்து, 1,200 ஏக்கர் பரப்பளவில், 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களுடன், 80 அடி அகலம் உள்ள அகழிகளுடன், 800 அடி உயர மலை உச்சியில், கி.பி.1190ம் ஆண்டு காடவக்கோன் வாரிசுகளாலேயே வலிமை வாய்ந்த செஞ்சி கோட்டை கட்டடப்பட்டது என்பதே வரலாற்று பேருண்மையாகும். ஆனால், வரலாற்றை தொலைத்துவிட்டு ஆதரவற்று நிற்கும் தமிழினம், செஞ்சி பகுதியிலுள்ள குப்பம் கோனேரிகுப்பம் என்றும், கோட்டைக்கு தேசிங்குராஜா கோட்டை என்றும் அழைப்பதையும் அமைதியாக அனுமதித்ததன் விளைவே, தற்போது செஞ்சிக்கோட்டை மராத்தியர்களுக்கு சொந்தமானது என்று சொந்தம் கொண்டாடும் அளவிற்கு மோசமான வரலாற்று இழிநிலையை எட்டியுள்ளது.
தமிழ்நிலத்தில் தமிழர் மூதாதைகள் அரசாண்ட செஞ்சி கோட்டை தமிழர்களின் பாரம்பாரிய சொத்தாகும். அதனை மராத்தியர்கள் கோட்டைபோல பொய்யாக வரலாற்றை புனைந்து அதற்கு பன்னாட்டு நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற முயலும் மாராத்திய மாநில அரசின் முயற்சி அப்பட்டமான வரலாற்று திரிபாகும்.
தமிழர் வரலாற்றை இழிவுபடுத்தி, தமிழர் கோட்டையை அயலாரின் கோட்டை என்று அடையாளப்படுத்துவதை தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது? செஞ்சிக்கோட்டை மராத்தியரின் கோட்டை என்ற அவ்வரலாற்றுப் புரட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, வழிமொழிந்துள்ளது வெட்கக்கேடானது. கீழடி மட்டும்தான் தமிழர் அடையாளமா? செஞ்சிக்கோட்டை தமிழர் அடையாளம் இல்லையா? அது மராத்தியருடையது என்பதை எப்படி திமுக அரசு ஏற்கிறது? மாராத்திய மாநில பாஜக அரசும், இந்திய ஒன்றிய பாஜக அரசும் இணைந்து முன்னெடுத்துள்ள கூட்டுச்சதிக்கு தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு துணைபோவது தமிழர்களுக்கு இழைத்துள்ள பச்சைத்துரோகமாகும். இதுதான் திமுக அரசு பாஜகவை எதிர்க்கும் முறையா?
ஆகவே, தமிழர்களுக்கு சொந்தமான செஞ்சி கோட்டையை மராத்தியர்களின் கோட்டையென யுனஸ்கோ நிறுவனத்தின் மூலம் அறிவிக்கும் முயற்சியை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழர் வரலாற்றை திரிக்கும் இக்கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி