முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புத்தன்துறையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்திருவிழா…

0

கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புத்தன்துறையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்திருவிழா முன்னேற்பாட்டு பணியின்போது மின்கம்பத்தில் ஏணி உரசியதில் மின்சாரம் தாக்கி அன்புத்தம்பிகள் மனு, ஜெஸ்டிஸ், சோபன், விஜயன் ஆகிய நான்கு மீனவச்சொந்தங்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த நான்கு தம்பிகளின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இனயம் புத்தன்துறை ஊர் மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

2022ஆம் ஆண்டு திருவையாறு அருகேயுள்ள களிமேடு தேர்த்திருவிழாவின்போது மின்வடத்தில் தேர் உரசி நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த கொடுந்துயரம் நடந்தேறியது முதல் தற்போது குமரி இனயம் புத்தன்துறை புனித அந்தோனியார் ஆலயத்திருவிழாவில் நான்கு பேர் உயிரிழந்த பெருந்துயர நிகழ்வுவரை, தமிழ்நாட்டில் திருவிழாக்காலங்களில் நடைபெறும் மின்விபத்துகள் அதிகரித்து வருவதால் மனித உயிர்கள் அடுத்தடுத்து பறிபோவது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தொடர்ந்திடும் இத்தகைய விபத்துகளை இனியேனும் தடுத்திட, திருவிழாக் காலங்களில் விழா ஏற்பாட்டாளர்களும், மின்துறை – காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், பொதுமக்களும், கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தி, உறுதியாக அவற்றை நடைமுறைப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்திடவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

எதிர்பாராது நிகழ்ந்த மின்விபத்தில் உயிரிழந்த நால்வர் குடும்பத்தின் வறுமைச்சூழலைக் கருத்திற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரம் காக்க தமிழ்நாடு அரசு தலா 25 இலட்சம் ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

@CMOTamilnadu @mkstalin

தம்பிகள் மனு, ஜெஸ்டிஸ், சோபன், விஜயன் ஆகிய நால்வருக்கும் என்னுடைய கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version