தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மீதும் தமிழ்த்தேசிய அரசியலின் மீதும் பற்றுறுதி கொண்ட அன்புச்சகோதரர் கணேசன் அவர்களின் அன்புமகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புமகள் க.கனிமொழி அவர்களின் தம்பியும், ஒசூர் கட்சி மாவட்ட மாணவர் பாசறைப் பொறுப்பாளருமான அன்புமகன் க.மணிமொழி பிரபாகரன் அவர்கள் சாலை விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிந்தும், மகிழுந்தில் பயணிக்கும் இருக்கைப் பட்டை அணிந்தும், சாலை விதிகளை முழுமையாகப் பின்பற்றி மித வேகத்தில் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று என் அன்பிற்கினிய தம்பி – தங்கைகளுக்கும், பேரன்புமிக்க பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் பலமுறை அறிவுறுத்தியும் கூட அதனைக் கருத்திற்கொள்ளாது போவதன் விளைவாக நிகழும் இதுபோன்ற சாலைவிபத்துகளில் உறவுகளை இழப்பது பெரும் மனவலியைத் தருகிறது.
சொற்களால் விவரிக்க இயலாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் சகோதரர் கணேசன் அவர்களுக்கும், அன்புமகள் கனிமொழி அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகன் க.மணிமொழி பிரபாகரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




