முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா த.வெள்ளையன்…

1

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா த.வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

வணிகப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும், வாழ்வாதார சிக்கல்களுக்காகவும் மட்டுமின்றி தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களுக்காகவும் வணிகர்களை ஒன்றுதிரட்டி போராடிய பெருந்தகை ஐயா வெள்ளையன் அவர்கள்.

தழல் ஈகி வீரத்தமிழ்மகன் அன்புத்தம்பி முத்துக்குமார் இறுதி நிகழ்வு, மூவர் தூக்குத் தண்டனை எதிர்ப்பு, காவிரி நதிநீர் உரிமை, வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிர்ப்பு, இணையவழி சில்லறை வணிகத்திற்கு எதிர்ப்பு, அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ, கூடங்குளம் அணுவுலை மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை போன்ற மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிர்ப்பு என மண்ணுக்கும், மக்களுக்குமான எண்ணற்ற போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்றவர் ஐயா வெள்ளையன் அவர்கள்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மூலம் அனைத்துத்தரப்பு வணிகர்களையும் ஒருங்கிணைத்து, சிறப்பாக வழிநடத்திய ஐயா வெள்ளையன் அவர்களது மறைவு வணிகப் பெருமக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான பேரிழப்பாகும்.

ஐயா வெள்ளையன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் வணிகப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

பெருமதிப்பிற்குரிய ஐயா த.வெள்ளையன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version