அன்புத்தம்பி மேத்யூ அருளானந்து தயாரிப்பில், அன்புத்தம்பி சீனு ராமசாமி இயக்கத்தில், அன்புத்தம்பிகள் அறிமுக நாயகன் ஏகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடித்துள்ள 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தினைச் சிறப்புக்காட்சியில் கண்டுகளித்தேன்.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் என தமிழ் மக்களின் மண் சார்ந்த வாழ்வியலையே காலத்தால் அழியாத திரைக்காவியங்களாகப் படைத்தளிக்கும் அன்புத்தம்பி சீனு ராமசாமி அவர்கள், அண்ணன்-தங்கை பாசம் என்னும் உணர்வுப்பூர்வமான உறவின் மேன்மையை 'கோழிப்பண்ணை செல்லதுரை' எனும் உள்ளத்தை உருக்கும் திரைப்படத்தின் மூலம் நம் கண்முன் காட்சிகளால் வெளிப்படுத்தியுள்ளார்.
அன்பும் பாசமும் குறுகி, உறவுகள் அருகி, குடும்பங்கள் என்பதே தனித்தனி தீவுகளாக மாறிவரும் தற்காலச் சூழலில், 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தினைக் காண்கின்ற ஒவ்வொருவரின் மனதிலும் உறுதியாக ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும் விதையினை இப்படம் விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தினைப் பார்த்து நான் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்.
அறிமுக நாயகன் என அறியாத அளவிற்கு அன்புத்தம்பி ஏகன் தன்னுடைய திறமையான நடிப்பாற்றலால் கதையின் நாயகனாகவே வாழ்ந்துள்ளார். அன்புத்தம்பி யோகி பாபு வழக்கத்தைவிட சற்று மாறுதலான கதாபாத்திரத்தில் ஆகச்சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.
கதையின் நாயகியாக வரும் பிரிகிடா, நாயகனின் தங்கையாக வரும் சத்யதேவி ஆகியோர் தங்களின் இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு உயிரூட்டியுள்ளனர்.
அண்ணன் பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், 'குட்டி புலி' தினேஷ், ரியாஸ், அன்புமகள் மானஸ்வி கொட்டாச்சி உள்ளிட்ட அனைவருமே ஏற்ற பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தம்பி அசோக்ராஜின் அழகான ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் தம்பி ஸ்ரீகர் பிரசாத்தின் அருமையான படத்தொகுப்பும், மனதை வருடும் என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் படத்தினை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்..!
செப்டம்பர் 20 அன்று வெளியாகவிருக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
@seenuramasamy #KozhipannaiChelladurai @arulanandhu_d @iYogibabu @ActorAegan
@NRRaghunanthan @Brigidasagaoffl @vchproduction





