பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு எதிராகப் போராடக்கூடிய ஏகனாபுரம் மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
@mkstalin @CMOTamilnadu @KanchiCollector @SMeyyanathan @AAI_Official @MoCA_GoI @DGCAIndia @RamMNK @TRBRajaa @MRKPanneer @byadavbjp @moefcc
பரந்தூரில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்து சற்றொப்ப 765 நாட்களாக மக்கள் போராடி வரும் நிலையில் இதுநாள் வரை ஒரு முறை கூட மக்களை சந்திக்காமல் இருப்பதோடு, இத்திட்டத்தைத் துரிதமாக செயல்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதன் வழியே மக்களுக்கு எதிரான போக்கினை வெளிப்படையாகத் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும். தற்பொழுது முழுமூச்சாக மக்களை அடக்கி ஒடுக்கும் எண்ணத்தில், அமைதி வழியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சகட்டமாகும்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போராடக்கூடிய மக்களின் மீது பதியப்பட்ட வழக்குகளுக்கு எதிராக குரல் கொடுத்த திமுக, தற்பொழுது ஆட்சியில் இருக்கும்போது அறவழியில் போராடக்கூடிய மக்களை அதனை விட வீரியமாக அடக்குமுறைக்கு ஆளாக்குவது என்பது திமுகவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பார்முலா பந்தயம் நடத்துவதிலும், அமெரிக்கப் பயணத்திலும் கவனம் செலுத்தி வரும் அரசு, அருகில் இருக்கும் ஏகனாபுரம் மக்களைப் பற்றியும் கொஞ்சமாவது சிந்தித்திட வேண்டும். போராடும் மாக்களின் மீது வழக்குப் பதியும் பாசிச போக்கினை உடனே விடுத்து, வழக்கினைத் திரும்பப் பெற்று, அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து செயல்பட வேண்டும் என்றும், இல்லையேல், கடும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சியின் சார்பாக எச்சரிக்கிறேன்.


