அன்னைத்தமிழ் வளர்க்க அமைத்த கழகத்தில் அறம் வளர்த்த ஆயிரமாயிரம் தமிழ் புலவர்கள் வாழ்ந்த மண்ணிலிருந்து, நீதிவழுவாதிருக்க தன்னுயிர் ஈந்த நெடுஞ்செழிய பாண்டியனும், மகனை தேர்க்காலில் இட்டு நீதிக்காத்த மனுநீதிச்சோழனும் அரசாண்ட பழம்பெருமைமிக்க தமிழர் பண்பாட்டு மரபிலிருந்து, இந்தியப் பெருநாட்டின் மிக உயர்ந்த நீதியமைப்பில் நீதியரசராக மதிப்பிற்குரிய ஐயா மகாதேவன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளதை அறிந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன்.
இந்திய மக்களாட்சி முறைமையில் எளிய மக்களின் இறுதி நம்பிக்கையாக உள்ள உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகிய சிற்சில நீதியரசர்கள் வரிசையில் ஐயா மகாதேவன் அவர்களும் தேர்வாகியுள்ளது பாமர மக்களிடத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
மனிதகுல வரலாற்றையும், பண்பாட்டையும் மீட்டுத்தரும் கருவூலங்களான தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பதிலும், தமிழரின் கலைச்செல்வங்களான திருடுபோன கோயில் சிலைகளை மீட்பதிலும் ஐயா அவர்கள் வழங்கிய வரலாற்றுச்சிறப்புமிக்கத் தீர்ப்புகள் நீதித்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அழியாப்புகழ் பெற்ற நீதிகளாகும்! அத்தகு அரும்பணியைத் தொடர்ந்திட அருளுடைமையும், சாண்றான்மையும் அணியாக, வாய்மையும், நடுவுநிலைமையும் தவறாது, நெஞ்சுரமும், நேர்மைத்திடமும் ஒருங்கே அமைந்திட்ட ஐயா மகாதேவன் அவர்களுக்கு தமிழும், அறமும் என்றென்றும் துணைநிற்கட்டும்!
நாட்டின் உயரிய பொறுப்பினை சீரிய கடும் உழைப்பினால் அடைந்திருக்கும் ஐயா அவர்கள், அண்மையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் ஆற்றிய தமிழ்ப் பேருரையை வலையொளியில் கேட்டு மிகவும் வியந்து மகிழ்ந்தேன். ஆழ்ந்த தமிழ் உணர்வும், நம் இனத்திற்கே உரிய அற உணர்வும் நிரம்பிய தங்கள் நல்லுரை தமிழின பெருமிதங்களில் ஒன்று.
இந்திய உச்சநீதின்ற நீதியரசராகப் பொறுப்பேற்றுள்ள ஐயா மகாதேவன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி




