முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான…

0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஐயா மு.செல்வராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பொதுவுடைமை தத்துவத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு அரசியல் பணியாற்றிய ஐயா மு.செல்வராஜ் அவர்கள், நான்கு முறை நாகை நாடாளுமன்ற உறுப்பினராகிய பெருமைக்குரியவர். என் மீது தனிப்பட்ட முறையில் பேரன்பு கொண்ட ஐயா அவர்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டபோதும், நாகையில் நான் பேசிய பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பெருந்தன்மையுடன் கலந்துகொண்டு என்னுடைய பேச்சை ரசித்துக் கேட்டு வாழ்த்திய பெருந்தகை.

ஐயா மு.செல்வராஜ் அவர்களின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கும், நாகை மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். ஐயாவின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், அரசியல் நண்பர்களுக்கும், நாகை மக்களுக்கும் என் ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

ஐயா மு.செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version