முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#நூல்_பரிந்துரை 08 #பேசுவோம்_போரிடுவோம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர்…

0

#நூல்_பரிந்துரை 08

#பேசுவோம்_போரிடுவோம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழீழ அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு "பேசுவோம் போரிடுவோம்" என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.

தமிழீழ விடுதலைக் களத்தில் போரிடுவதோடு மட்டுமின்றி, தமிழீழ மக்களின் அரசியல் தெளிவிற்காக, பல்வேறு காலக்கட்டங்களில் ஆழ்ந்த அரசியல் நுண்ணறிவை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுரைகளை எழுதி அரும்பணியாற்றியவர் அண்ணன் க.வே. பாலகுமாரன் அவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளராகப் பங்கெடுத்துக்கொண்ட இவர், வரலாறு மற்றும் அரசியலில் தாம் பெற்ற பட்டறிவுகளை நேர்த்தியான வடிவில் அனைத்துலக அரசியல் நகர்வுகளோடு இணைத்து எழுதுவதில் புலமைப்பெற்றவர். அரசியல் தளம் மட்டுமின்றி தமிழரின் அறிவியல், சங்க இலக்கியம், தொல்லியல் என பல்துறை ஆளுமையோடு கட்டுரைகளை எழுதுபவர்.

இந்நூல் விடுதலைப் போராட்ட வரலாற்றின் பல்வேறு காலக்கட்ட நிகழ்வுகளை நமது கண்முன்னே நிறுத்துகிறது. இந்த தொகுப்பின் முதல் கட்டுரையாக தொகுக்கப்பட்டுள்ள "அதிர்ச்சி நோய் எமக்கல்ல" (எரிமலை, செப். 2000) என்ற கட்டுரையே இதனை வெளிப்படுத்துகிறது. தமிழீழத்தில் 2000ஆம் ஆண்டுவாக்கில் புலிகளின் போர்த்திறனையும், அவர்களின் சமூக அக்கறையோடு கூடிய தமிழீழக் கட்டமைப்பையும் கண்டு பன்னாட்டு சமுதாயம் அதிர்ச்சி அடைந்து நின்ற தருணம். தமிழீழ விடுதலைக்கு எதிராக நின்றவர்கள், அரசியல் தலைவர்கள் புலிகள் இயக்கத்தைப் பற்றி பேசிய அவதூறுகளை எதிர்கொள்ளும் விதமாக இந்த கட்டுரை அமைந்திருக்கிறது. இதுபோலவே இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரையும் விடுதலைப் போராட்டத்தின் ஆவணக் குறிப்புகள் என நான் உளமார நம்புகிறேன்.

இன விடுதலைக் கனவைச் சுமந்து நிற்கும் எனதன்பு தம்பி-தங்கைகள், உறவுகள் அனைவரும் அவசியம் இந்நூலினை வாங்கி வாசித்து, பயன்பெற வேண்டுகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version