ஓ.. என் சமகாலத் தோழர்களே..!
கிளிக்கு றெக்கை இருக்கும் வரையில் கிழக்கு வானம் தூரமில்லை!
முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை!
பாய்ந்து பரவும் இளைய நதிகளே, பள்ளம் நிரப்ப வாருங்கள்!
காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும் கதிர்கள் சுமந்து தாருங்கள்!
முன்னோர் சொன்ன முதுமொழி எல்லாம் முதுகில் சுமந்தால் போதாது!
சொன்னோர் கருத்தை வாழ்க்கைப் படுத்தத் துணிந்தால் துன்பம் வராது!
காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர்!
கூட்டுப் புழுதான் பட்டுப்பூச்சியாய் கோலம் கொள்ளும் மறவாதீர்!
அறிவை மறந்த உணர்ச்சி என்பது திரியை மறந்த தீயாகும்!
எரியும் தீயை இழந்த திரிதான் உணர்ச்சி தொலைத்த அறிவாகும்!
பழையவை எல்லாம் பழமை அல்ல பண்பும் அன்பும் பழையவைதான்!
இளையோர் கூட்டம் ஏந்தி நடக்க இனமும் மொழியும் புதியவைதான்!
அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்!
கரிகாலன் தன் பெருமையெல்லாம் கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள்!
ஏவும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்!
ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லா கோளிலும் ஏற்றுங்கள்!
ஓ..! என் சமகாலத் தோழர்களே..!
“இரத்த தானம்”
– கவிப்பேரரசு வைரமுத்து



