சிவகங்கை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்கள் இளையான்குடி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார் எனும் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அளவுகடந்த இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டு உணர்வோடு தமிழ்த்தேசிய களமாடும் இளம் பிள்ளைகள் இது போன்று சாலை விபத்தினால் மரணிக்கும் செய்திகள் வரும் ஒவ்வொரு முறையும் அவை எனக்குள் ஏற்படுத்தும் மனவலியினை வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடிவதில்லை. உங்களைப்போன்ற தமிழிளம் தலைமுறைப் பிள்ளைகளின் இழப்பென்பது உங்களின் குடும்பத்திற்கோ, எனக்கோ, நாம் தமிழர் கட்சிக்கோ ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல. அது தமிழ்த்தேசிய இனத்திற்கும், அதன் விடுதலைக்கும் ஏற்படுகின்ற பேரிழப்பாகும் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும், எப்பொழுதும் மனதில் இருத்தி செயலாற்றுங்கள்.
எனது உயிருக்கினிய தம்பி-தங்கைகளிடம் மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்துவது, வாகனங்களில் பயணிக்கும் போது தலைக்கவசம், இருக்கைவார் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் அணிந்து மிக கவனமாகவும், மித வேகத்துடனும் பயணிக்க வேண்டும் என்பதே. எனது அன்பு பிள்ளைகள் இதனை அண்ணனின் கண்டிப்பான உத்தரவாக ஏற்று உறுதியாக கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புத்தம்பி மணிகண்டன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் இக்கடினமானச் சூழலில் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தம்பி மணிகண்டன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

