அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு செந்தமிழன் சீமான் நெஞ்சம் நிறைந்த நன்றி!

9

கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது. ‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும். – செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

Exit mobile version