சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் சிதைந்த நிலையில் உள்ள அரசுப்பள்ளிக்கூடத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக சீரமைத்து தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

4

கடந்த 1972 ஆம் ஆண்டு பெருந்தமிழர் ஐயா சுப.துரைக்கண்ணு அவர்களின் முயற்சியால் சிவகங்கை மாவட்டம் சித்தலூரில் தொடங்கப்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியானது தற்போது சிதைந்து இடியும் நிலையில் உள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஏழைக்குழந்தைகள் படிக்கும் பள்ளியைச் சீரமைக்கக்கோரிப் பல முறை பெற்றோர்கள் மனு அளித்தும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.

சித்தலூர் அரசுப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் படித்து வந்த நிலையில், அடிப்படை வசதிகள் சரிவரச் செய்து தரப்படாமையால் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்தது. போக்குவரத்து வசதி இல்லாததாலும், பழைய கட்டிடங்கள் இடியும் சூழலில் உள்ளதாலும் பக்கத்துக் கிராம மாணவர்கள் யாரும் படிக்க முன் வராததால் வெறும் 44 மாணவர்களே தற்போது பயில்கின்றனர். இந்நிலையில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த அப்பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து பள்ளி வளர்ச்சி குழுவினை உருவாக்கி அதன் மூலம் நிதி திரட்டி போக்குவரத்து வசதி ஏற்படுத்தியதால், மாணவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது, என்றாலும் அது போதுமானதாக இல்லை.

சிதைந்து நிலையிலிருந்த ஆரம்பப்பள்ளி பெருமழையின் காரணமாக மேலும் சேதமடைந்து, மேற்கூரை வழியாக தண்ணீர் கசிந்ததால், ஆரம்பப்பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்று உயர்நிலைப்பள்ளியின் கணினி அறையில் கடந்த ஓராண்டாகப் பாடம் நடத்தி வந்தார்கள். தற்போது பெய்த மழையில் அக்கட்டிடமும் இடிந்து விழ தொடங்கியதால் தற்போது நாடகமேடையில் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பாடம் பயிலும் அவலநிலை பெருங்கொடுமையாகும்.

சித்தலூர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய குழந்தைகள் படிக்கும் பல ஆயிரம் பள்ளிகள் இத்தகைய மோசமான நிலையிலேயே உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பைச் சீரமைக்காமலும், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தராமலும், திமுக அரசு நடிகர்களை வைத்துக் கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று வெற்று விளம்பரம் செய்வது நகைப்புக்குரியதாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் சிதைந்த நிலையிலுள்ள அரசுப்பள்ளிக்கூடத்தை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி