குமாரபாளையம் எக்ஸெல் கல்லூரி உணவகத்தில் உணவு உண்ட 400 மாணவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு: உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

5

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இயங்கி வரும் எக்ஸெல் தனியார் கல்லூரியின் உணவகத்தில் உணவு உண்ட 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 4 மாணவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கின்றது.

சுகாதாரமற்ற உணவகத்தால் மாணவர்களின் உயிரோடு விளையாடும் தனியார் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக அரசு, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி – கல்லூரி விடுதிகளில் உரிய ஆய்வை மேற்கொள்ளாத காரணத்தாலேயே குமாரபாளையம் தனியார் கல்லூரி மாணவர்களுக்குக் கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட அடிப்படை காரணமாகும்.

கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று நடிகர்களை வைத்து நாடகம் நடத்தி, வெற்று விளம்பரம் தேடுவதில் திமுக அரசு காட்டிய ஆர்வத்தையும், செலவிட்ட பெருந்தொகையையும் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், முறையாக ஆய்வு செய்வதிலும் காட்டத் தவறிய திமுக அரசின் அலட்சியமே, தற்போது 400 மாணவர்களுக்கு உயிராபத்து ஏற்படுத்தும் அளவிற்குச் சூழலை மிக மோசமாக்கியுள்ளது.

ஆகவே, திமுக அரசு இதன் பிறகாவது, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இயங்கும் உணவகங்கள் மற்றும் விடுதிகளில், தயாரிக்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை ஆண்டிற்கு இருமுறையேனும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து மாணவ மாணவியரின் நலனை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், மாணவர்களின் உடல் நலத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொடுநிகழ்வு கல்லூரி நிர்வாகம் மற்றும் உணவக உரிமையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, நீதிவிசாரணையை விரைந்து நடத்தி மாணவர்களின் உடல் நலப்பாதிப்பிற்கு உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1983868036991087148

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி