புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினம், ரஹமத் நகரில் இசுலாமியச் சொந்தங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகள் மற்றும் பள்ளிவாசலை இடிக்க திமுக அரசு அறிவிக்கை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வீடுகள் இடிக்கும் உத்தரவை எதிர்த்து, அம்மாப்பட்டினத்தில் வாழும் இசுலாமியச்சொந்தங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது, திமுக அரசு சிறிதும் மனச்சான்றின்றி வீடுகளை இடிக்க முயல்வது கொடுங்கோன்மையாகும்.
கடந்த 50 ஆண்டுகளாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கும் செலுத்தி வாழ்ந்து வரும் இசுலாமியச் சொந்தங்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்றச் செயலாகும். சட்டமன்ற, நாடாளுமன்றத தேர்தலின்போது வீடு வீடாக இசுலாமிய மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள், இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? இசுலாமிய மக்களின் வாக்கு வேண்டும்? அவர்களுக்கென்று வாழ்விடம் வேண்டாமா? அதிகாரிகள் மூலம் அடக்குமுறைகளை ஏவி இசுலாமியச் சொந்தங்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
அம்மாப்பட்டினம் முழுவதுமே பொது இடமாக இருந்து பின் குடியிருப்பாக மாறிய நிலையில் இரண்டு தலைமுறையாக இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை மட்டும் இடித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயல்வது ஏன் யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற, யாரை மகிழ்விக்க முயல்கிறது? இது முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் சிந்தனை இல்லையா? உத்திரப்பிரதேசத்தில் பாசிச பாஜக அரசு இசுலாமியச் சொந்தங்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்குவதற்கும், தமிழ்நாட்டில் திமுக அரசு அம்மாப்பட்டினத்தில் இசுலாமிய மக்களின் வீடுகளை மட்டும் இடிக்க முயல்வதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
அதே, அம்மாப்பட்டினத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பகுதிகளையும் இடித்து அகற்றும் துணிவு திமுக அரசிற்கு இருக்கிறதா? ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கை காரணம் காட்டி ஒட்டுமொத்த இசுலாமியச் சொந்தங்கள் வாழும் இடங்களை மட்டும் இடித்து அகற்ற முயல்வது மதப்பாகுபாடு அன்றி வேறென்ன?
உண்மையில் திமுக அரசிற்கு மக்களின் மீதும், அவர்களின் வாழ்வுரிமையின் மீதும் அக்கறை இருக்குமாயின், வலிமையான வாதங்களை நீதிமன்றத்தில் வைத்து, எளிய மக்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக்கூறி, எளிதாக மக்களின் குடியிருப்புகளை காத்திருக்க முடியும். ஆனால், திமுக அரசு மக்களின் குடியிருப்புகளை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், வேண்டுமென்றே சரியான வாதங்களை முன் வைக்கத் தவறுவதுடன், அதன் காரணமாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பினை காரணம் காட்டியே மக்களை மிரட்டி வீடுகளை இடித்து, பச்சைத்துரோகம் புரிகின்றது.
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், நிலவிற்பன்னர்கள் ஆகியோருக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை திமுக அரசு தாரைவார்க்கிறது. அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க திறனற்ற திமுக அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
ஆகவே, புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினத்தில் இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை இடிக்கும் முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்.
https://x.com/Seeman4TN/status/1983871069753884828
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி



