திருவேற்காடு வீரராகவபுரத்தில் செயற்பட்டு வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது! – சீமான் வலியுறுத்தல்

5

ஆவடி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு, வீரராகவபுரத்தில் புதிதாக மருத்துவமனை கட்ட 1.20 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாகச் செயற்பட்டு, அத்திட்டத்தை இடம் மாற்றிப் புளியம்பேடு பகுதியில் மருத்துவமனை கட்டி, மக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

திருவேற்காடு, காடுவெட்டி, வீரராகவபுரம் பகுதியில் 1967ஆம் ஆண்டு அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டப்பட்டது. பின், 2013ல் அதை விரிவாக்கம் செய்து அரசு ஆரம்பச் சுகாதார நிலையமாகச் செயற்பட்டு வருகிறது. இங்கு, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமை தோறும், 300 கர்ப்பிணிப் பெண்களும், மற்ற நாட்களில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் மருத்துவம் பெற்று வருகின்றனர். அதேபோல் 1500க்கும் மேற்பட்ட முதியவர்கள் நீரழிவு நோய், இரத்தக்கொதிப்புக்கு மாத்திரை வாங்கி வருகின்றனர். வீரராகவபுரம் பகுதியானது ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், திருவேற்காடு நகராட்சி மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள மேல்பாக்கம், கண்ணப்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களும் எளிதாகப் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து மருத்துவம் பெற வாய்ப்பாக அமைந்திருந்தது.

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டுத் தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீரராகவபுரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால், திடீரென இத்திட்டம் அப்பகுதி பொதுமக்களுக்குத் தெரியாமல் வீரராகவபுரத்திலிருந்து புளியம்பேடு பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனால் வீரராகவபுரத்தில் பல ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த மருத்துவமனை மூடப்பட்டு, இனி புளியம்பேட்டில் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது புளியம்பேடு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார நிலையம், திருவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது. மேலும் அப்பகுதி, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் பொதுப் போக்குவரத்து வசதி இல்லை, இதனால் ஏழை எளிய மக்கள், வேலப்பன்சாவடியில் இறங்கி 2 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. போதிய பாதுகாப்பு வசதியும் அப்பகுதியில் இல்லை. இதனால், பரிசோதனைக்காகவும், மருத்துவம் பெறவும் செல்லும் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

வீரராகவபுரத்தில் மருத்துவமனை கட்ட 1.2 ரூபாய் கோடி நிதி ஒதுக்கி திருவேற்காடு நகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாகச் செயற்பட்டு புளியம்பேடு பகுதியில் மருத்துவமனை கட்டி மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கி அலைகழிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. திருவேற்காடு வீரராகவபுரத்தில் செயற்படும் ஆரம்பச் சுகாதார நிலையத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை மிக மிக நியாயமானது.

ஆகவே, தமிழ்நாடு அரசு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதியோடு வீரராகவபுரத்தில் செயற்படும் ஆரம்பச் சுகாதார நிலையத்தை இடம் மாற்றாமல் மக்கள் பயன்பெறத் தொடர்ந்து நடத்த வேண்டும். அதே சமயம், திருவேற்காடு சுற்றுவட்டாரத்தில் மக்கள் தொகை ஒரு இலட்சத்தை எட்டியுள்ளதால், அதற்கேற்ப புளியம்பேடு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவமனையைத் துணை சுகாதார நிலையமாக மாற்றி இயங்கச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி