சுங்கக்கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கடும் கண்டனம்

31

தமிழ்நாட்டிலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (31.08.25) முதல் 45 ரூபாய் வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்களின் விலையை பன்மடங்காக உயர்த்தி, அதனால் அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலையேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டு, சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் அவ்வப்போது உயர்த்தும் இந்திய ஒன்றிய பாஜக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டுமென அரசியல் கட்சிகள், மண்ணுரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதனை தொடர்ந்து அலட்சியப்படுத்தி, மீண்டும் மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது, வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயலாகும். எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றலடித்துவிட்டு இப்போது சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்துவது துளியும் மனச்சான்றற்ற கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடேயாகும்.

ஏற்கனவே, விலைவாசி உயர்வு விண்ணை முட்டுமளவுக்கு உயர்ந்து செல்கையில் அதனைக் குறைக்க எதுவொன்றையும் செய்யாத ஒன்றிய பாஜக அரசு சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி, மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயர்த்த முனைவது அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும் பொருளியல் போராகும்.
சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத அடிமை நிலையாகும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கப்படும் பணிக்குச் செலவான தொகையினைவிட அதிகமாக, தொடர்புடைய நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் வசூல் செய்து கொண்ட பிறகும், தொடர்ந்து 15, 20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதக் கணக்கு வழக்குமின்றித் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், அரசு அதை அனுமதிப்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

வசூல் செய்யப்படும் கட்டணக்கணக்கை குறைத்துக்காட்டி மிகப்பெரிய மோசடியில் சுங்கவசூல் செய்யும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதையெல்லாம் தடுக்க ஒரு சாலை அமைக்கப்பட்டதற்கான செலவு எவ்வளவு? ஒவ்வொரு நாளும் சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் தொகை எவ்வளவு? எத்தனை ஆண்டுகளில் அது நிறைவடைகிறது? சாலையை பராமரிக்க ஒவ்வொரு மாதமும் ஆகும் செலவு எவ்வளவு? மீதமாகும் வசூல் கட்டணம் யாருக்குச் செல்கிறது? என்பது குறித்த தகவல்கள் என யாவற்றையும் நாட்டிலுள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளும் வெளிப்படையாக அறிவிக்காதவரை சுங்கக்கட்டணம் என்பது பகற்கொள்ளையாகத்தான் இருக்கும்.

ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முடிவை உடனடியாகக் கைவிடுவதோடு, மக்களின் உழைப்பைச் சுரண்டி பகற்கொள்ளையில் ஈடுபடும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன்.

மக்களை வஞ்சிக்கும் தனியார் நிறுவனங்களின் சுங்க கட்டணக் கொள்ளையை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி விரைவில் முன்னெடுத்து, தமிழர் நிலத்தில் எந்தவொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்க முடியாத நிலையை உருவாக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி