முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பனை கனவுத் திருவிழா – 2025 விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர்…

0

பனை கனவுத் திருவிழா – 2025

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையில், 24-05-2025 அன்று நடைபெறவிருக்கும் 4ஆம் ஆண்டு பனைக் கனவுத் திருவிழாவிற்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவை அளிப்பதோடு நானும், நாம் தமிழர் கட்சி உறவுகளும் நிகழ்வில் கலந்து கொண்டு, நிகழ்வு வெற்றிபெற துணைநிற்போம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பனை கனவுத் திருவிழாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, நம் வளங்களை அழிக்காத இயற்கையாக பனை மரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய பனை சார்ந்த உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், பனையோலை மற்றும் பனை நாரினால் செய்யப்பட்ட பயன்பாட்டுப் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என பனையில் இருந்து கிடைக்கும் எல்லா பொருட்களையும் நேரடியாகக் காட்சிப்படுத்த இருக்கின்றனர்.
பனையில் இருந்து கிடைக்கப்பெற்ற அனைத்துப் பொருட்களையும் காட்சிப்படுத்திப் பனை மரத்திற்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் படையலில் தொடங்கி, பனை மரம் ஏறும் போட்டி, நுங்கு திண்ணும் போட்டி, சிறார்களுக்கு நுங்கு வண்டி ஓட்டுதல், பனையோலையில் பீப்பீ, காத்தாடி செய்தல் மற்றும் மரபு சார்ந்த விளையாட்டுகள், பறையிசையோடு பனையேறிகளின் கதைப்பாடல் மற்றும் ஒப்பாரிக் கூத்து போன்ற பனை சார்ந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், பனங்கள் மற்றும் பதநீர் போன்றவைகளை பனை மரங்களிலிருந்து இறக்கி, கருப்பட்டி தயாரிப்பதை மக்கள் நேரடியாகப் பார்க்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சுற்றுச்சூழலுக்குத் தீங்கினை விளைவிக்கும் பட்டாசுகளுக்கு மாற்றாக தமிழர்களின் பண்பாட்டோடு ஒன்றி இருக்கும் மாவொளி சுற்றும் நிகழ்வும் உள்ளது. இந்நிகழ்வில், ஆயிரம் நபர்கள் ஒரே இடத்தில் கூடி மாவொளி (கார்த்தீ) சுற்றும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.
பனை சார்ந்த வாழ்வியலையும், பனையேறிகளின் தற்கால சிக்கல்களையும் எடுத்துரைக்கும் வகையில் நடைபெறவிருக்கும் பனைக் கனவுத் திருவிழாவில்
நாம் தமிழர் கட்சி உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென்று பேரன்போடு அழைக்கின்றேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version