இந்துத்துவாவை விமர்சித்ததற்காக கன்னட நடிகர் சேத்தன்குமாரைக் கைதுசெய்வதா? – சீமான் கண்டனம்

188

இந்துத்துவா பொய்களால் கட்டமைக்கப்பட்டதெனக் கூறி, ட்விட்டர் தளத்தில் கருத்துப்பகிர்வு செய்ததற்காக கன்னட நடிகர் சேத்தன்குமார் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான கருத்துரிமையையே முற்றாகப் பறிக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தகையப் பழிவாங்கும் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

தம்பி சேத்தன்குமார் கூறிய கருத்துகளில் பிழையே, தவறோ எதுவுமில்லை. மதத்தைக் கொண்டு நாட்டைப் பிளவுப்படுத்த எண்ணும் பாசிசச்சக்திகளின் கோர முகத்திரையைக் கிழித்தெரியும் பொருட்டு உண்மையையே அவர் கூறியிருக்கிறார். அவர் மீதான அரசதிகாரத்தின் அடக்குமுறையானது கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதலாகும். அவரது கருத்தோடு உடன்பட்டு, அவரது கருத்துரிமையை நிலைநாட்டத் துணைநிற்கிறேன்.