தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் அமீரகச் செந்தமிழர் பாசறை சார்பில் 14-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா,

63

கடல் கடந்தும் தழைக்கும் தமிழர் அறம்! அமீரகச் செந்தமிழர் பாசறையின் 14-ஆம் ஆண்டு தைப்பொங்கல் மற்றும் புத்தாண்டுத் திருவிழா எழுச்சியுடன் நடைபெற்றது!

துபாய்:
நாம் தமிழர் கட்சியின் அமீரகச் செந்தமிழர் பாசறை சார்பில் 14-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா, துபாயில் கடந்த தை 11 (சனவரி 25, 2026) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழர் பண்பாட்டு விழுமியங்களைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இவ்விழாவில், 600-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழர் பாரம்பரிய முறைப்படி, புதுப்பானையில் பொங்கலிட்டு தொடங்கிய இவ்விழாவில், மகளிர் பாசறையினர் முளைப்பாரி ஏந்தி வர, கும்மியடித்துக் குலவையிட்டு கதிரவன் வழிபாடு இனிதே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் இணைந்து, யாழ் கலையகத்தின் ஒருங்கிணைப்பில் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த பறை இசையை முழங்கினர்.

தமிழர்களின் வீரக்கலைகளான களரி மற்றும் சிலம்பத்தைச் சிறுவர், சிறுமியர் வெகுச்சிறப்பாகச் செய்து காட்டினர். தொடர்ந்து நடைபெற்ற மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், ஆண்களுக்கான விறுவிறுப்பான கயிறு இழுத்தல் போட்டியும் விழாவிற்கு மேலும் உற்சாகத்தை ஊட்டின. பாசறை உறவுகள் மற்றும் ஆதரவாளர்களின் விற்பனையகங்களும், புத்தகக் கண்காட்சியும் பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

நண்பகல் உணவிற்குப் பிறகு, உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்வுகள் அகவணக்கம், வீரவணக்கம் மற்றும் தமிழ்த்தேசிய உறுதிமொழி ஏற்புடன் தொடங்கின. அமீரகச் செந்தமிழர் பாசறை மற்றும் ‘தமிழி’ தமிழ் வகுப்புச் சிறுவர்களின் கண்ணைக் கவரும் கலைத்திறன் வெளிப்பாடுகள் அரங்கேறின. விழா சிறப்புறத் துணைநின்ற நன்கொடையாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வென்றவர்களுக்கும், கலைநிகழ்வுகளில் பங்கேற்ற சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.
தமிழ்த்தேசியப் பற்றாளர்களின் பேராதரவுடன் நடைபெற்ற இப்பெருவிழாவில், 600-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்து, அயலக மண்ணைத் தமிழ் மண்ணாக மாற்றினர்.

இறுதியாக, பாசறைப் பொறுப்பாளர்கள் அவையோருக்கு நன்றியுரை நவில, இன எழுச்சியுடன் தைப்பொங்கல் திருவிழா இனிதே நிறைவுற்றது.

வெல்க தமிழ்!
வெல்க தமிழ்த்தேசியம்!

செந்தமிழர் பாசறை – ஐக்கிய அரபு அமீரகம்