தலைமை அறிவிப்பு – உலக மீனவச்சொந்தங்களுக்கு சீமான் வாழ்த்துகள்!

4

உலகின் தலைசிறந்த புரதச்சத்து அதிகமுள்ள உணவான மீன் உணவினை மனிதர் யாவர்க்கும் பெற்றுத்தரத் தங்கள் இன்னுயிரைப் பணயமாக வைத்து, பெரும்பணி புரிபவர்கள் தொல்குடி மீனவ மக்களாவார்.

அதிலும் உலகின் முதல் மாந்த இனமான தமிழ்ப்பேரினத்தில் பிறந்த மீனவ மக்களுக்கு நீண்ட பெரும் வரலாறும், வாழ்வியலும் உண்டு. அத்தகு பெருமைமிகு தமிழ் மீனவர்கள், இன்றைக்கு மீன்பிடித்தொழிலையே முற்றாகக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரமாகும்.

உலகில் எல்லா மீனவர்களும்
ஆர்ப்பரிக்கும் அலைகடல் மீது முட்டிமோதி, கை வலிக்க, கண் நோக கலம் செலுத்தி, கடல் சீற்றம், புயல், மழை என இயற்கைப் பேரிடர்கள் யாவையும் தாங்கி, ஒவ்வொரு நாளும் கடலுக்குள் செல்லும் தங்கள் உயிரை விலையாக வைத்தே மீன் பிடிக்கச் செல்கின்றனர்.

ஆனால், தமிழ் மீனவர்களுக்கு மட்டும்தான் இயற்கை பேரிடர்களையும் தாண்டி, இலங்கை கடற்படையின் இனவெறிக்குப் பலியாகும் பேராபத்தும் உள்ளதெனத் தெரிந்தும், அதையும் எதிர்கொள்ளத் துணிந்தே கடலுக்குச் செல்ல வேண்டிய பெருங்கொடுமையான நிலையுள்ளது.

 

துப்பாக்கிச்சூடு நடத்துவது, மீன்களைக் கடலில் கொட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, வலைகள் அறுக்கப்பட்டு, படகுகள் பறிக்கப்பட்டு தமிழனாய் பிறந்துவிட்டதற்காக எம் மீனவச்சொந்தங்கள் இலங்கை கடற்படையால் படும் இன்னல்கள் வார்த்தைகளில் சொல்லி மாளக்கூடியதல்ல.

நடுக்கடலில் வலை விரித்தால் மீன்களுக்குப் பதிலாக மீனவர் பிடிபடுவது உலகில் தமிழினத்திற்கே நடக்கின்ற கொடுமையாகும். அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் இந்த மனிதப் பேரவலத்திற்கு யார் பொறுப்பு?

உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வலிமையைக் கொண்டுள்ள இந்தியா, இலங்கை கடற்படை தாக்க வரும்போது தடுத்து, இதுவரை ஒரே ஒரு தமிழ் மீனவரை கூடக் காப்பாற்றாதது ஏன்?

 

உலகில் எந்த நாட்டு இராணுவமும் தம் சொந்த நாட்டு மீனவரை இப்படி சுட்டுக்கொல்வதை வேடிக்கைபார்க்குமா?

எல்லை தாண்டி மீன் பிடித்தது குற்றம் என்கிறீர்கள்? எங்கள் எல்லையை எடுத்துக்கொடுத்து யார் குற்றம்?

தமிழருக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரைவார்த்தது யார் குற்றம்? பிரிக்க முடியாத நடுக்கடலில் எல்லைக்கோட்டை வகுத்தது யார் குற்றம்?

தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கை உங்களுக்கு நட்பு நாடென்றால் தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? தமிழராய் பிறந்ததைத் தவிர எம் மீனவர் செய்த பிழை என்ன?

என்ற எம்முடைய கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலுண்டு?

இங்கு, கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறதே தவிர, மீனவர்கள் கைது செய்யப்படாமல் தடுக்க இதுவரை எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

 

இங்கு, பறிக்கப்பட்ட படகுகளுக்குத்தான் இழப்பீடு வழங்கப்படுகிறதே தவிர, படகுகள் பறிக்கப்படாமல் பாதுகாக்க வழியென்ன?

எந்த ஒரு தமிழ் மீனவரும் இலங்கை கடற்படையால் கொல்லப்படாமல் தடுக்கத்தான் ஓர் அரசு வேண்டுமே தவிர, கொல்லப்பட்ட பிறகு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க எதற்கு ஓர் அரசு?

இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ்நாட்டு மீனவர்களை இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்வதை நாம் பொறுத்துப்போகிறோம்?

போராடி, போராடிச் சோர்ந்து போயுள்ள நம் மீனவச்சொந்தங்கள் படும் துயரத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் வேடிக்கைபார்க்கப் போகிறோம்? எப்போதுதான் இதற்கு நிலைத்த தீர்வு காணப்போகிறோம்?

தண்ணீர் கடலில் மிதக்கும் படகைப்போல, கண்ணீர் கடலில் மிதக்கும் நம் மீனவரின் வாழ்வில் சூழ்ந்துள்ள துயர இருள் விடிவது எப்போது?

மீனவர் சிக்கலுக்கு மீனவரே போராடிச்சாக வேண்டுமென்றால் உறவாய், இனமாய் உயிரோடு நாம் வாழ்வதெதற்கு?

 

மீனவர்ச்சிக்கலை மானத்தமிழரின் சிக்கலாக உணர்ந்து என்றைக்கு தமிழினம் ஒன்றுதிரண்டு ஒற்றுமையாக போராட முனைகிறதோ அன்றைக்கே இனத்திற்காக விடிவு காலம் பிறக்கும்!

 

மீனவர் பாதுகாப்பே!
மானத்தமிழர் பாதுகாப்பு!

மீனவ மக்கள் வாழ்வுரிமை!
தமிழர் எங்கள் பிறப்புரிமை!

கச்சத்தீவை மீட்க வேண்டும்!
கடல்தாயின் பிள்ளையை காக்க வேண்டும்!

மீன்பிடித்தொழிலை உயர்த்த வேண்டும்!
மீனவர் கண்ணீரைத் துடைக்க வேண்டும்!

துயரங்கள் நீங்கி, இன்பங்கள் ஓங்கி நல்வாழ்வு நிலைத்திட
உலக மீனவச்சொந்தங்கள் அனைவருக்கும் மீனவர் நாள் நல்வாழ்த்துகள்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி