கூடலூரில் மக்களைத் தாக்கும் ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

6

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி, மசினகுடி மாவனல்லா பகுதியில் கடந்த 24.11.2025 அன்று ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த மலைவாழ் பழங்குடியினரான அம்மா நாகியம்மாள் அவர்களை ஆட்கொல்லி புலி தாக்கி கொன்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அம்மா நாகியம்மாள் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கின்றேன்.

கூடலூர் பகுதிகளில் மக்கள் வாழ்விடப் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நுழைந்து மக்களைத் தாக்கி கொல்வது தொடர் கதையாக மாறி வருகிறது. வனவிலங்கு தாக்குதல்களால் மக்கள் உயிர் இழக்கும் பெருந்துயர நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது அரசு மற்றும் வனத்துறையின் அலட்சியப்போக்கைக் காட்டுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்தை உறுதி செய்வதாலும், வனவிலங்குகளின் உணவுத் தேவையை வனப்பரப்புக்குள் நிறைவு செய்வதாலும் மட்டுமே வனவிலங்கு தாக்குதல் படுகொலைகளை நிரந்தரமாகத் தடுக்க முடியும் என்பதை தமிழ்நாடு அரசு உணரவேண்டும்.

குறிப்பாக யானைகளின் மிக முக்கிய உணவு ஆதாரமான மூங்கில் மரங்கள் கொத்துக் கொத்தாக அழிந்து வருகிறது. மீண்டும் காடுகளில் மூங்கில் மரங்களை நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் வாழ்விடப் பகுதிகளின் அருகாமையில் மூங்கில்கள் அழிந்த இடங்களில் முட்புதர்கள் போலக் காடுகள் மண்டி கிடப்பதும் புலி,சிறுத்தை போன்ற வனவிலங்குகள் ஊடுருவி மனிதர்களைத் தாக்க வழிவகைச் செய்யும். எனவே நீலகிரி மாவட்டம் முழுவதும் மக்கள் வாழ்விடப் பகுதிகளின் அருகாமையில் இது போன்ற இடங்களைக் கண்டறிந்து முட்புதர் காடுகளை உடனே தாமதிக்காமல் அகற்ற வேண்டும்.

தமிழ்நாடு வனத்துறையின் அலட்சியத்தால் நீலகிரி மலைப்பகுதிகளில் வனவிலங்குகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி மனிதர்கள் இறப்பது மட்டுமின்றி, வனத்திற்குள் போதிய உணவு கிடைக்காமல் வனவிலங்குகள் இறப்பதும் தொடர்ந்து நடைபெறுவது மிகப்பெரிய கொடுமையாகும். இந்த மாதம் மட்டும் மூன்று யானைகள் கூடலூருக்கு உட்பட்ட வனச்சரகப் பகுதிகளில் இறந்துள்ளது தமிழ்நாடு வனத்துறையின் மெத்தன போக்கையே காட்டுகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் ஆட்கொல்லி புலியை விரைந்து பிடித்து அடர்வனப் பகுதியில் விட வேண்டுமெனவும், வனவிலங்குகளுக்குத் தேவையான உணவு தேவைகளை வனத்திற்குள் கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து உணவின்றி வனவிலங்குகள் இறப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள முட்புதர் காடுகளை அகற்றுவதன் மூலம் வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் துயரங்கள் இனியும் தொடராமல் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

கூடலூரில் ஆட்கொல்லி புலி தாக்கியதில் உயிரிழந்த அம்மா நாகியம்மாள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

https://x.com/Seeman4TN/status/1994702703742914600?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி