அரசின் அலட்சியப்போக்கால் தூய்மைப்பணியின்போது உயிரிழந்த தங்கை வரலட்சுமியின் மரணத்துக்கான துயர்துடைப்புத்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

12

சென்னை, கண்ணகி நகர் அருகே தூய்மைப்பணியாளர் தங்கை வரலட்சுமி அவர்கள் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த னத்துயருமடைந்தேன். தங்கையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தங்கை வரலட்சுமி அவர்களுக்குக் காலணி வழங்கப்படாததன் விளைவாகவே தூய்மைப்பணி செய்யும்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்திருக்கிறாரெனும் செய்தி பெரும் மனவலியைத் தருகிறது. தூய்மைப்பணியாளர்களுக்கு 35 வகை பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், மிகவும் அடிப்படையான காலணியும், கையுறையுமே வழங்கப்படாத இழிநிலை நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும். சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் எளிய மக்களான தூய்மைப்பணியாளர்களைப் பணிப்பாதுகாப்பும், உயிர்ப்பாதுகாப்பும் இல்லாத ஒரு கொடுஞ்சூழலில், பணிக்கு அமர்த்துவதும், தனியார்மயப்படுத்தி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதுமான ஆளும் திமுக அரசின் போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது. செயற்கை நுண்ணறிவு உலகை ஆட்டிப் படைக்கும் 21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தொடர்வதும், அதில் சாதியின் அடிப்படையில் உழைக்கும் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்குச்செயல்படா? மலக்குழி மரணங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது என வெளிவரும் புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்த மாநிலத்துக்குமான அவமானம் இல்லையா?

சமூகத்தைத் துப்புரவுசெய்து தூய்மைப்படுத்தும் தூய்மைப்பணியாளர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சி, தனியார்மயத்தைத் திணிக்கும் திராவிட மாடல் அரசு, தங்கை வரலட்சுமியின் மரணத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? ஏழை, எளிய மக்களின் உயிர்கள் அரசின் அலட்சியத்தால் பறிபோகும்போதெல்லாம் சில இலட்சங்களை வீசியெறிந்து மக்களின் வாயை மொத்தமாக மூடிவிடலாமென எண்ணுகிறதா? நீதிமன்றத்தின் உத்தரவெனக் கூறி, தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தைக் கலைத்து, ஒடுக்குமுறையை ஏவிய ஆட்சியாளர் பெருமக்களே, தூய்மைப்பணியாளர்களுக்குச் செய்து கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் என நீதிமன்றம் கூறியது மட்டும் ஏன் உங்கள் செவிகளில் விழவில்லை? மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதற்குத் தடைவிதித்துச் சட்டமியற்றி, பத்தாண்டுகளுக்கு மேலாகியும் ஏன் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை? சமூக நீதி எனும் சொல்லாடலைக் கூச்சமின்றி, மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரிக்கும் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களே! இதுதான் நீங்கள் சமூக நீதியைக் கட்டிக் காக்கிற இலட்சணமா? விளிம்பு நிலை மக்களுக்காக ஆட்சி நடத்தும் அழகா? பேரவலம்!

ஆகவே, தூய்மைப்பணியில் ஈடுபடும்போதே இறந்துபோன தங்கை வரலட்சுமி அவர்களின் மரணத்துக்கான துயர்துடைப்பு நிதியாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும், அவர்களது குழந்தைகளின் கல்விச்செலவை அரசே முழுமையாக ஏற்பதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் ஆளும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி