சமரசமற்ற தமிழ்த்தேசியவாதி சீதையின் மைந்தன் மறைவு, தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் வெளியிட்ட துயர் பகிர்வுச் செய்தி

255

தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், தமிழியப் பேரியக்க நிறுவனருமான ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தமிழர் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து களம் கண்ட ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் இறுதிநொடி வரை சமரசமற்ற தமிழ்த்தேசியவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர். கட்சத்தீவு மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக சிறப்புற செயலாற்றியதுடன், கட்சத்தீவு குறித்து புத்தகம் எழுதி கட்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமான பூர்வ நிலம் என்பதை தக்க வரலாற்றுச் சான்றுகளுடன் நிறுவியவர். தமிழ் மண்ணின், மீதும் மக்களின் மீதும் அளவற்ற பற்று கொண்டு, திராவிட சூழ்ச்சி அரசியலை அம்பலப்படுத்தும் அரும்பணி புரிந்த ஐயா சீதையின் மைந்தன் அவர்களின் இழப்பென்பது தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ்த்தேசியப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன். ஐயா சீதையின் மைந்தன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

https://x.com/Seeman4TN/status/1720505053717430589?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி