ஆக்கிரமிப்பு என்றுகூறி மீனவ மக்களின் வாழ்விடங்களை அகற்றும் கொடுங்கோன்மையினை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

144

அறிக்கை: ஆக்கிரமிப்பு என்றுகூறி மீனவ மக்களின் வாழ்விடங்களை அகற்றும் கொடுங்கோன்மையினை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

இராமநாதபுரம் மாவட்டம், புதுவலசை சத்திரம் கிராமத்தில் குடிசை அமைத்து ஏறத்தாழ 300 மீனவக் குடும்பங்கள் பல ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மேலும், கடற்கரை அருகே படகு, வலை, கயிறு சரி செய்வதற்கு கடற்கரை அருகிலேயே குடிசை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மீனவர்கள் வாழ்ந்துவரும் இடம் அரசுக்கு சொந்தமானது, அதனை ஆக்கிரமித்துள்ளனர் என்று கூறி இடத்தையும், குடிசையையும் உடனடியாக காலி செய்யுமாறு அதிகாரிகள் மிரட்டியுள்ளதோடு, பொக்லைன் இயந்திரம் மூலம் குடிசை வீடுகளை இடித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற முயலும் திமுக அரசு, பெருமுதலாளிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? அவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா? கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடித்து அகற்ற திமுக அரசிற்குத் துணிவிருக்கிறதா? கடந்த பல ஆண்டுகளாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கு செலுத்தி வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்றச் செயலாகும். அம்மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள் இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், நிலவிற்பன்னர்கள் ஆகியோருக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை திமுக அரசு தாரைவார்க்கிறது. அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க திறனற்ற திமுக அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை சத்திரம் கடற்கரை கிராமத்தில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மீனவ மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version