தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! – சீமான் பெருமிதம்

406

தமிழர்கள் எங்களை வீழ்த்தியது, தமிழருக்குள்ளே இருக்கிற வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பதவிவெறி, பணத்தாசைதானே ஒழிய, வீரமோ -ஆயுதமோ இல்லை என்று அன்றே உணர்ந்து, உணர்த்திய பெருந்தமிழர் ஐயா தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்.

🔴நேரலை 30-10-2022 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் - சீமான் மலர்வணக்கம் | சென்னை நந்தனம்

‘எனக்கு பாய்தான் தெரியும், பஞ்சு மெத்தை தெரியாது; பதுங்கத் தெரியும், பயம் கொள்ளத் தெரியாது; விவசாயம் தெரியும், வியாபாரம் தெரியாது’ என்று வாழ்ந்த எளிய மகன். ‘தேசமே எனது உடல், தெய்வீகமே எனது உயிரென வாழ்ந்த விடுதலைப் போராட்ட வீரர். 100 ஏழைகள் கூடி ஒரு பணக்காரரை உருவாக்குகிறார்கள், ஒரு பணக்காரன், ஆயிரம் ஏழைகளை உருவாக்குகிறான்’ என்று போதித்த பாட்டாளி வர்க்கத்தினுடைய பங்காளி. கைரேகை சட்டம் என்கிற கொடுஞ்சட்டத்தைத் திணித்த போது அதை எதிர்த்துப் போராடி, தகர்த்த புரட்சியாளர் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.

‘பாலை போத்தலில் அடைத்து இன்று விற்பதைப் போல நாளை தண்ணீரையும் அடைத்து விற்பார்கள்; விளைநிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்வார்கள்; புறாக்கள் கூடுகட்டி வாழ்வது போல ஒரு நாள் மக்கள் வீடு கட்டி வாழ்வார்கள்’ என்று இன்று நடக்கின்ற இப்பேரவலங்களையெல்லாம் அன்றே கணித்த காலஞானி. ‘உண்மையைச் சொல், நீ உரக்கச்சொல், உறுதியாகச் சொல், இறுதிவரை சொல், நீ தான் சிறந்த தமிழ் மகன்’ என்று கற்பித்த பெருந்தகை. ‘மலர்மாலைக்கு ஒருவன் கழுத்தை நீட்டுவதைப்போல, மரணக் கயிற்றுக்கு எவன் கழுத்தை நீட்டுகிறானோ, அவன்தான் வீரன்!’ என்று எங்களைப் போன்ற தமிழிளம் தலைமுறையினருக்கு உணர்வூட்டிய வீரத்தமிழ்மகன்.

‘உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது. தெய்வத்திற்கு முன்பு இரு கைகளையும் இணைத்துதான் நாம் வழிபடுகிறோம், எனவே பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற இந்த சாதிய பாகுபாடு கூடவே கூடாது’ என்று போதித்த சமத்துவ நாயகர். சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும், சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனையே வழிபடத் தகுதியற்றவன். பதவி என்பது மக்களுக்குச் செய்கின்ற சேவைதான் என்கின்ற எண்ணம் கொண்டவனிடத்தில் அதிகாரம் இருக்க வேண்டும், இல்லையென்றால் மக்களின் நலன் என்பது கனவாகிவிடும் என்பது போன்ற ஆகப்பெரும் தத்துவங்களை, கோட்பாடுகளைப் போதித்த ஆகப்பெரும் சிந்தனையாளர்.

நம்முடைய ஐயா முத்துராமலிங்கத்தேவர் அவர்களினுடைய நினைவைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழிளம் தலைமுறையினராகிய நாம், அடிமை தமிழ்ச்சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிர்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்போம்.

மதிப்புமிக்க நமது ஐயா தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version