இராமநாதபுரம் அருகே வாகனவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்த 4 மீனவச் சொந்தங்களின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

178

இராமநாதபுரம் அருகே வாகனவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்த 4 மீனவச் சொந்தங்களின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 11ஆம் தேதியன்று கடல் அட்டை மீதான தடையினை நீக்கக்கோரி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில், மீனவச் சொந்தங்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி அன்சர் அலி, முகைதீன் அப்துல்காதர், ரஜிபு, சேது ஆகிய நான்கு மீனவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 12 மீனவர்கள் படுகாயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

வாழ்க்கையே போராட்டமாகிப்போன எம்மீனவச் சொந்தங்களுக்கு, உரிமை மீட்புப் போராட்ட களத்தில் பங்கேற்றுவிட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட இக்கொடும் விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுப்பதுடன், படுகாயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற்று திரும்ப விழைகின்றேன்.

தமிழ்நாடு அரசு உயிரிழந்த மீனவச்சொந்தங்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதுடன், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும், உயர் மருத்துவச் சிகிச்சையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி