திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – செங்குன்றம்

101

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான், மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்துகட்சியின் உட்கட்டமைப்பை முறைபடுத்திவருகிறார். இன்று 13-08-2018 (திங்கட்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 03 மணிவரை திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, மாதாவரம், பொன்னேரி, மற்றும் திருவொற்றியூர்  சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின்அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வித்தார். இச்சந்திப்பு செங்குன்றம் நெல், அரசி மொத்த வியாபாரிகள் சங்கத் திருமண மாளிகையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அம்பத்தூர்அன்புத்தென்னரசன்,  விருகை இராஜேந்திரன், மற்றும் மருத்துவர் சிவக்குமார், தலைமை நிலையச் செயலாளர் திருவள்ளூர்செந்தில்குமார்,  மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி,வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில் கூறியதாவது,

13-08-2018 சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman Latest Pressmeet | AIMS | EVM Scam | Ballet

தமிழகத்தில் பயங்கரவாதம்:

பிரதமர் மோடி தமிழகத்திற்குக் கொண்டு வந்த ஒரே ஒரு நல்ல திட்டத்தைச் சொல்லச் சொல்லுங்கள். பார்க்கலாம். அவர்கள் கொண்டு வருவது எல்லாமே நலத்திட்டங்கள் என்றால் அதனை எதற்காக கேரளாவிற்கோ, ஆந்திராவிற்கோ, கர்நாடகாவிற்கோ கொண்டு செல்வதில்லை. எட்டுவழிச் சாலையை அமைத்தே தீருவேன் என்று பாராளுமன்றத்தில் பேசுகிற அமைச்சர்கள் ஒருவர்கூட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீருவேன் எனக் கூறவில்லையே.? தமிழகத்தில் பயங்கரவாதம் பெருகிவிட்டது என்கிறார் பிரதமர் மோடி. சொந்த மாநில மக்களைப் பல்லாயிரக்கணக்கில் கொலைசெய்துவிட்டு, அவர்களின் சாவை காரில் நாய் அடிப்பட்டால் எவ்வாறு உணர்கிறேனோ அவ்வாறு உணர்கிறேன் என்று சொல்வதைவிட ஒரு பயங்கரவாத மனநிலையுண்டா? எதற்கெடுத்தாலும் தமிழகத்தில் பயங்கரவாதம் பெருகிவிட்டது என்கிறார்கள். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தவிர வேறு யார் ஆயுதத்தை வைத்துப் பயிற்சி எடுக்கிறார்கள்.? எனவே, இதுகுறித்தான பிரதமர் மோடியின் பேச்சு பொறுப்பற்றத்தனமாக இருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை:
எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவோம் என்கிறார்கள். ஐந்தாண்டு கால ஆட்சியே முடியப் போகிறது. இனி எப்போது கொண்டுவரப் போகிறார்கள்.? அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது அதனை அமைப்பதற்கென 4 மருத்துவமனைகளைத் தேர்வுசெய்து அறிவித்தார்கள். அப்போது கொண்டுவராது, இப்போது கொண்டு வருவேன் எனக் கூறுவது வாக்குகளைப் பெறுவதற்காகத்தானே? எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த வெற்று வார்த்தைகள்தான் வருகிறதோ ஒழிய, அதனை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தையே இவர்கள் தொடங்கவில்லை.

மீண்டும் வாக்குச்சீட்டு முறை:
நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும். வாக்குச்சீட்டு முறையிலே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை மிக நியாயமானது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். மின்னணு வாக்குப் பதிவு முறையைக் கண்டறிந்த அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளுமே அதனைக் கைவிட்டு விட்டது. நைஜீரியாவும், இந்தியாவும்தான் இன்னும் அம்முறையைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084