அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிய தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. வட மாகாணசபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரனும், ஏனைய 29 உறுப்பினர்களும் யார் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. பதவிப் பிரமாணம் கட்டாயமாக ஜனாதிபதி அல்லது ஆளுநர் முன்னிலையில் செய்ய வேண்டிய சட்டத் தேவைகள் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையிலேயே பதவிப் பிரமாண நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் கூட பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் கட்சித் தலைவர் சம்பந்தனின் முன்னிலையில் கூட பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். இதேவேளை, வட மகாணசபையின் முதலமைச்சராக கட்சி விக்னேஸ்வரனை ஏக மனதாக தெரிவு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணசபைக்கு கட்டடம் இல்லை
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் மூலம் வடக்கு மாகாணசபை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், வடக்கு மாகாணசபைக்கான கட்டடங்கள் எதுவும் கிடையாது. இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டு 28 ஆண்டுகளின் பின்னர், வடக்கில் மாகாணசபை நிறுவப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், அமர்வுகளை நடாத்தவும் ஏனைய பணிகளை மேற்கொள்ளவும் இதுவரையில் கட்டடங்கள் எதுவும் ஒழுங்கு செய்யப்படவில்லை.
வட மாகாணசபைக்கு நிரந்தர கட்டடம் எதுவும் கிடையாத காரணத்தினால், வாடகை அடிப்படையில் கட்டடமொன்றை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார். உரிய கட்டடமொன்றை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் இந்த கட்ட்டம் அமைக்கப்பட உள்ளது. வடக்கு மாகாணசபைக்கு நிரந்தர கட்டம் ஒன்றை அமைப்பது குறித்து திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



