முகப்பு கட்சி செய்திகள்

கடைசிப் பாலகனின் இரத்தம் – கண்களில் நீர் வரவழைக்கும் தீபச்செல்வனின் கவிதை!!

100

கடைசிப் பாலகனின் இரத்தம்

மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில்
குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன
இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும்
மூடாத வாய்களில்
மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன
இரத்தத்தில் பிறந்து
இறுதிவரையில் இரத்தம் காயாமல்
பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய
குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர
எனது நிலத்து பாலகர்கள் திரிகையில்
இலையான்கள் காயங்களை அரித்து
அவர்களைத் தின்று முடித்தன
எல்லோருடைய கண்களின் முன்பாகவும்
எனது தேசத்திற்கெதிரான போரில்
பாலகர்களை பலியிடும் பொழுது
தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில்
தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது
பெண்குறியிலிருந்து குழந்தைகள்வரை சிதைக்கப்பட
பாலகர்களின் பூமியின் வேர் கருகியது
போர் ஆயுதங்கள் மிகுந்த ரசனையொடு
பாலகர்களை சிதைத்துக் கொன்று தின்றன
ஏங்கும் குழந்தைகளின் கண்களை பிடுங்கி
வார்த்தைகளை அழித்து அவர்கள் இல்லாமல் செய்யப்பட்டனர்
பாலகர்களுக்கு எதிரான போரில்
வேருடன் அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது
பூமி வெளித்துப் போனது
அழிக்கப்படும் தேசத்தில் பிறந்த
ஏதும் அறியாத பாலகர்களைக் கொன்று
இரத்தத்தை உறிஞ்சிப் பருகும் போர்ப்படைகள்
பூமியின் கடைசிப் பாலகனின்
நெஞ்சில் துப்பாக்கிகளால் துளைகளையிட்டு
இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பொழுது
எல்லாக் குழந்தைகளும் நிலத்தில் வீழ்ந்து கிடந்தனர்.

தீபச்செல்வன்

நன்றி – உலகத் தமிழ்ச் செய்திகள்

Exit mobile version