108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிறப்பு ஊதியத்தை வழங்கவேண்டும் – சீமான் கோரிக்கை

82

108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிறப்பு ஊதியத்தை வழங்கவேண்டும் – சீமான் கோரிக்கை

கொரானா என்கின்ற நுண்ணுயிரி நோய்த் தொற்று உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற இந்த வேளையில், இந்தியப் பெரு நாட்டிலும் இது வேகமாகப் பரவி வருகிறது . இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐயும், தமிழகத்தில் எண்ணிக்கை 100 ஐயும் கடந்து, ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன.

வரலாறு காணாத இந்தப் பேரிடர் காலத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் , அவசர ஊர்தி ஊழியர்கள் எனப் பலரும் தங்களது உடல் நலத்தையும், தங்களது குடும்ப நலத்தையும் பொருட்படுத்தாமல் சமூகக் கடமை ஆற்றி வருவது அனைவரையும் நெகிழ வைக்கிறது. அதிலும் குறிப்பாக நோயாளிகளை அவசர காலங்களில் 108 அவசர ஊர்திகளில் வைத்து விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கின்ற மிகமுக்கியமான கடமையை ஆற்றி வருகிற அவசர ஊர்தி ஊழியர்களின் பணியானது போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் மற்றவர்கள் உயிரைக் காப்பாற்ற முனையும் அவர்களது உன்னத உழைப்பிற்கு எதைக் கொடுத்தும் ஈடுசெய்ய இயலாது. அப்படிப்பட்ட புனிதப் போராளிகளாக விளங்கும் அவசர ஊர்தி ஊழியர்களில் மருத்துவ உதவியாளர்கள், அவசர அழைப்பு மைய பணியாளர்கள், ஓட்டுனர்கள் என ஏறத்தாழ 5200 பேர் கடந்த 12 வருடங்களாகத் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த முறையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பதே மிகுந்த வேதனைக்குரிய செய்தியாகும்.

இதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை சம்பளம் உட்பட எவ்விதப் பிடித்தமும் செய்யாமல் தங்களது ஊழியர்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற மத்திய மாநில அரசுகளின் உத்தரவை மீறி, தற்போது 108 அவசர ஊர்தி சேவையை ஏற்று நடத்தும் தனியார் நிறுவனம் தொழிலாளர்வரி பிடித்தம் செய்தும், பணப்பலனை (PL ) நிறுத்தி வைத்தும் ஓட்டுநர்களுக்கான சம்பளத்தை முழுமையாக வழங்கவில்லை. இதனால் ஏற்கனவே குறைவான சம்பளத்தில் பணியாற்றும் தங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மேலும் பொருளாதார நெருக்கடியை அளித்துள்ளது என்று அவசர ஊர்தி ஊழியர்கள் குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர். மேலும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவால் அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டடிருப்பதால் மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டிய நோயாளிகள் அனைவருமே 108 அவசர ஊர்தியையே பயந்துடுத்துவதால் ஊழியர்களின் பணிச்சுமை மும்மடங்காக அதிகரித்துள்ள இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களும் போதுமான அளவு வழங்கவில்லை என்றும் தெரியவருகிறது.

நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்கு செய்யும் மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களையே அரசுப் பணியாளர்களாக அறிவித்து, அனைத்து சலுகைகளையும் தந்துள்ள தமிழக அரசு நாட்டையும் மக்களையும் காக்கின்ற பணியைச் செய்கின்ற அவசர ஊர்தி ஓட்டுனர்களை ஏன் நிரந்தர அரசுப் பணியாளர்களாக அறிவிக்கவில்லை? தனியார் மருத்துவமனைகளே சொந்தமாக அவசர ஊர்தி சேவையை வைத்துக்கொண்டிருக்கும்போது, மருத்துவத்துறையில் முன்னணி மாநிலமாக விளங்குவதாகக் கூறும் தமிழக அரசு ஏன் அவசர ஊர்தி சேவையைச் சொந்தமாக எடுத்து நடத்தவில்லை? என்ற கேள்விகள் எழுகிறது. “வான் அவசர ஊர்தி” சேவைக்காக 10 கோடி ஒதுக்கியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 108 அவசர ஊர்தி சேவையைத் தமிழக அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், அவசர ஊர்தி ஊழியர்களின் மதிப்பு மிகுந்த சேவையைப் போற்றி அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் மாநில அரசு சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அறிவித்துள்ள ஒரு மாதகாலச் சிறப்பு ஊதியத்தையும் , மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவப் பணியாளர்களுக்கான 50 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட்டத்தையும் அவசர ஊர்தி ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அவசர ஊர்தி ஊழியர்களுக்குக் கொரோன நுண்ணுயிரி தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவர்களுக்குச் சிறப்புக் கவசம், கையுறை, உடைகள் உள்ளிட்ட அனைத்து உயிர்காக்கும் உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்! – சீமான் நம்பிக்கை
அடுத்த செய்திமதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்! – சீமான் அறிவுறுத்தல்