கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு

231

செய்திக்குறிப்பு: 18-11-2020 வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் – தலைமையகம்  | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின்  விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில ஏகாதிபத்தியதிற்கு எதிராக  கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 84 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி   இன்று  18-11-2020 புதன்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு  நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது,

காணொளி: https://youtu.be/UEKJsCuv1XQ

எங்கள் மூதாதை முருகனைத் திட்டமிட்டு மறைத்தார்கள். பிள்ளையாரைக் கொண்டு வந்த அளவிற்கு தமிழர் இறையான முருகனைப் போற்றாது தவிர்த்தே வந்தார்கள். ஆகவே, எமது  இறை முருகனை முன்னிறுத்தி நாங்கள் உளமார கொண்டாடுகிறோம். ஆனால், பாஜகவின் வேல் யாத்திரை என்பது முழுக்க முழுக்க அரசியல் நாடகம்தான். இவ்வளவு நாள் அவர்களின் கண்ணுக்கு தெரியாத எங்கள் முருகனும், வேலும் இப்போது தெரிகிறதென்றால், அதற்குக் காரணம் யார் என்று மக்களுக்குத் தெரியும். அயோத்தியில் இராமரை வைத்து அரசியல் செய்தது போல, கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்தது போல இங்கு முருகனைக் கையிலெடுக்கிறார்கள். இவர்கள் தலைகீழாக நின்று முருகனைத் தூக்கி சுற்றினாலும், முருகனைக் கொண்டாடுவதால் எங்களுக்குத்தான் நன்மை வந்து சேருமே ஒழிய, அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே, பாஜக மிகவும் சிரமப்பட்டு வேல் பேரணி நடத்தி நாம் தமிழர் கட்சியைத்தான் வளர்க்கிறது.

பீகார் தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில் மறுபடியும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வென்றுள்ளதாகவே தோன்றுகிறது. பாஜகவினர் இராமரை நம்புவதைவிட வாக்குப்பதிவு எந்திரங்களைத்தான் பெரிதும் நம்புகின்றனர். பாஜகவின் உண்மையான கூட்டணி வாக்குப்பதிவு எந்திரங்களோடுதான். பாஜக, காங்கிரஸ் இரண்டும் கட்சிகள்தான் வெவ்வேறு; கொள்கையளவில் இரண்டும் ஒன்றுதான். பாஜக தீவிர இந்துத்துவா என்றால், காங்கிரஸ் மிதமான இந்துத்துவா. அவ்வளவுதான் வேறுபாடு. பாஜக கொண்டு வந்தவற்றில் பண மதிப்பிழப்பைத் தவிர சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.ஐ.ஏ, நீட், ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற மற்ற எல்லாத் திட்டங்களும், சட்டங்களும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கி வைக்கப்பட்டதுதான். அதனால்தான், ராகுல்காந்திக்கு பாஜகவை முழுமூச்சாக எதிர்க்க முடியவில்லை.

பீகார் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லையென்றால், லல்லு பிரசாத் மகன் கூடுதல் இடங்களை வென்றிருப்பார். அதே நிலை, தமிழகத்தில் திமுகவிற்கு ஏற்படாமலிருக்க காங்கிரசைக் கூட்டணியிலிருந்து கழற்றி விடவேண்டும். அதிமுகவிற்கு எதிர்காலம் வேண்டுமென்றால் பாஜகவைக் கழற்றிவிடவேண்டும். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிர்காலம் வேண்டுமென்றால், இந்த இரண்டு கட்சியையும் மக்கள் கைவிடவேண்டும்.

எந்த ஒரு பொதுச்சொத்தையும் தனியாருக்கு தாரைவார்க்க முனைப்பு காட்டும் மத்திய அரசு; தமிழர்களின் சொத்தான அண்ணா பல்கலைக்கழகத்தை ஏன் தன் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு செல்லத் துடிக்கிறது? எல்லா துறையையும் தனியார்மயமாக்கும் போது தன்னால் சரிவர நிர்வகிக்க முடியவில்லை; தனியார்தான் சிறப்பாக நிர்வாகிப்பார்கள் எனக் காரணம் கற்பிக்கும் மத்திய அரசு அண்ணா பலகலைக்கழகத்தை கைப்பற்றத் துடிப்பது ஏன்? அதையும் தனியாரிடம் ஒப்படைக்கவா? தற்போது அதானி ஏர்போர்ட், அதானி அக்ரி வந்துள்ளது போல, சில ஆண்டுகளில் அம்பானி இந்தியா, அதானி இந்தியா என உருவாகிவிடும். இந்தியாவைக் கூறுபோட்டு தனியாருக்கு விற்றுவிட்டார்கள். காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் இருக்கும் சண்டையே யார் இந்தியாவை சீக்கிரம் விற்று கல்லாக் கட்டுவதென்பதுதான்!

சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நானும் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்; நானும் நினைக்கிறேன். ஆனால், அதுகுறித்து பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றெண்ணுகிறேன்.

சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டுக் கிராமப்புறங்களில் ஏரிகள், கண்மாய்கள், குளம், குட்டைகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றிருப்பதைப் பயணங்களின் போது கண்கூடாகக் காண்கிறேன். தண்ணீரில் தன்னிறைவு என்பது எட்டப்பட்டதாகத் தெரியவில்லை; தண்ணீர் விற்பனைக்கு என்று கொள்கை முடிவெடுத்துவிட்ட அரசு, தண்ணீர்பஞ்சத்தை ஒருபோதும் தீர்க்காது.

– இவ்வாறு சீமான் கூறியுள்ளார்

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திகடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்