பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

678

செய்திக்குறிப்பு: 30-10-2020 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் -சீமான் மலர்வணக்கம் – தலைமையகம்  | நாம் தமிழர் கட்சி

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி 30-10-2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு,

https://youtu.be/TwR1n4uXt2Q

அடிமை வாழ்வைவிட விடுதலைச்சாவு மேலானது ; விடுதலை அல்லது வீரமரணம் என முடிவெடுத்துத் தம் இளம் வயதிலேயே களம் கண்ட மானத்தமிழர். எனக்குப் பாய்தான் தெரியும் , பஞ்சுமெத்தை தெரியாது; எனக்கு மக்களைத்தான் தெரியும் மன்னர்களைத் தெரியாது ; எனக்குப் பதுங்கத் தெரியும், பயம்கொள்ளத் தெரியாது; எனக்கு வேளாண்மைத்தான் தெரியும், வியாபாரம் தெரியாது; என்று தம் வாழ்வில் இதையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்தவர். வாழ்க்கையில் யோகிகளும், துறவிகளும் தவம் செய்வார்கள். ஆனால் தம் வாழ்க்கையையே தவமாக வாழ்ந்த தவயோகி.

இன்று பாலை வாங்குவதைப்போல், மக்கள் ஓர்நாள் தண்ணீரையும் வாங்குவார்கள் பணம்கொடுத்து, எதிர்காலத்தில் விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கி விற்பார்கள் இந்த மக்கள், புறாக்கள் கூடுகட்டி வாழ்வதைப்போல நகரங்களில் மக்கள் வீடுகட்டி வாழத் தொடங்குவார்கள் என்று காலத்தை அன்றே கணித்த கால ஞானி; எங்குப் பார்த்தாலும் பஞ்சம், எங்குத் திரும்பினாலும் இலஞ்சம் என்று ஆகிவிட்டது, அன்று இலஞ்சம் என்கின்ற இந்தக் கையூட்டை வாங்குவதற்கே அஞ்சினார்கள், கூசினார்கள். ஆனால் இன்று வீதிகளில் மூக்குப்பொடி பரிமாறிக்கொள்வதைப் போல இலஞ்சத்தைப் பரிமாறிக்கொள்கிறார்கள் என்று அன்றே இன்றைய நிலையைச் சாடியப் பெருந்தகை.

இன்றைக்கு இருக்கிற பொருளாதார நிலையை அன்றே கூறியவர் எங்கள் ஐயா தேவர் அவர்கள். இந்த நாடு, இவ்வுளவு பெரிய பின்னடைவை சந்தித்ததற்கு, இவ்ளோ பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்ததற்குக் காரணம் நாம் சட்டப்படி விடுதலைப் பெற்றிருக்கிறோமே தவிரப் பொருளாதார விடுதலைப் பெறவில்லை. காரணம் நம்முடைய பொருளாதாரப் பிடிப்பு அந்நிய நாட்டவரிடம் இன்னும் இருக்கிறது என்று வருந்துகிறார்கள். என் அன்புக்குரிய சொந்தங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும், என்னிலும் இளைய தம்பி தங்கைகள் புரிந்துகொள்ள வேண்டும், காவியங்கள் , காப்பியங்கள் எப்பொழுதும் மைகளால் , எழுத்தாணிகளால் எழுதப்பெறுகிறது. ஆனால் வரலாறு எப்போதும் மக்களுடைய கண்ணீரிலும், இரத்தத்திலும்தான் எழுதப்பபெறுகிறது. அப்படிக் கண்ணீரிலும், இரத்தத்திலும் எழுதப்பெற்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்.

பெருங்காமநல்லூரிலேயே நடந்த அந்த எழுச்சிமிகுந்த போரென்பது ஜாலியன்வாலாபாக்கினை விடச் சரித்திர புகழ் வாய்ந்தது.அதனை திட்டுமிட்டு இவர்கள் மறைத்தார்கள். ஜாலியன் வாலாபாக்கிலே ஜென்ரல் டயர் சுடுவான் என்பது யாருக்கும் தெரியாது. திடலில் அடைந்திருக்கும்போது திடிரென இடப்பட்ட உத்தரவினால் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். ஆனால் பெருங்காமநல்லூரில் நடந்தது அப்படி அல்ல; குற்றப்பரம்பரை, கைரேகை சட்டத்தை எதிர்த்து எமது மக்கள் போராடுகிறபோது, சுடச்சொல்லி உத்தரவு போடப்பட்டபிறகு போனால் சுட்டுக்கொன்றுவிடுவான், செத்துப்போவான் என்று தெரிந்தும், நமது மக்கள் வாளையும் , வேலையும் ஏந்திப் பாய்ந்தார்கள்.

யாரும் மன்னர் பரம்பரை அல்ல; போர்ப்பயிற்சி எடுத்தவர்கள் அல்ல; உழைக்கும் மக்கள், பாட்டாளி வர்க்க பரம்பரை! பாய்ந்து, பல நூற்றுக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்தார்கள். ஜாலியன் வலாபாக்கைவிடப் பெரும்புரட்சிக்களம் நம்முடைய தமிழ்நிலம். அந்தக் கைரேகை சட்டத்தைப்போட்டுப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம்முடைய விடுதலை வேட்கையைத் தணித்துவிடலாம் என்று எண்ணியபோது , அந்தக் கைரேகை சட்டத்தை எதிர்த்துப்போராடிய புரட்சியாளர் நம்முடைய ஐயா தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.

தினமும் காலையிலும், மாலையிலும் கர்ப்பிணிப் பெண்கள் , வயது முதிர்ந்தவர்கள், உழைக்கும் மக்கள், திருமணமானவர்களெல்லாம் போய்க் கைரேகை வைக்க வேண்டும் என்ற இழிநிலையைச் சுமப்பதற்குப் பதிலாகக் கட்டைவிரலை வெட்டி எறியலாம் என்ற ஒற்றைவார்த்தைக்குப் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கட்டைவிரலை வெட்டி வீசினார்கள் என்றால், நமது ஐயாவின் வார்த்தையே தமது வாழ்க்கை என்று வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலில் புகுந்தால் நாடு நாசமாகிவிடும், சாதிய சிந்தனை கொண்டவன் இறைவனைத் தொழவே அறுகதையற்றவன். உண்கிற கை உயர்ந்தது, உழைக்கிற கை தாழ்ந்தது என்கிற எண்ணம் எவருக்கும் இருக்கக் கூடாது. இறைவனுக்கு முன்பு இரண்டு கையையும் இணைத்துதான் நாம் வணங்குகிறோம். அந்தச் சமத்துவ எண்ணம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். மனிதப்பிறப்பில் பாகுபாடு பார்க்ககூடாது என்று போதித்த பெருந்தகை.

வைத்தியநாத ஐயரவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவு போராட்டத்தை மதுரையில் முன்னெடுத்தபோது, எல்லோரும் எதிர்த்தார்கள். தெய்வத்திருமகன் நமது ஐயா மட்டும்தான், நீங்கள் அழைத்துக்கொண்டு செல்லுங்கள், நான் உடன் வருகிறேன், எவன் தடுக்கிறான் என்று பார்ப்போமென்று சாதிய மேலாதிக்கத்தை அடித்துச்சரித்த பெருந்தகை. அவரை இன்றைக்கு ஒரு சாதிய குறியீடாக மாற்றி நிறுத்தியிருப்பது இந்தக் கேடுகெட்ட திராவிட அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி. சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் நமது சாதிக்குத் தலைமையேறுங்கள் என்று கேட்கிறபோது, நான் கடல், என்னைக் குட்டைக்குள் அடைக்கப் பார்க்கிறீர்களா, எந்திரித்துப் போங்கள் என்று பேசிய பெருந்தகை நம்முடைய ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.

உண்மையைச்சொல், உரக்கச்சொல், அதை உறுதியாகச் சொல் இறுதிவரைச்சொல், நீதான் உண்மையான வீரன் என்று சொன்னார் ! எங்களைப்போன்ற பிள்ளைகளுக்கு அவர் கற்பித்த பாடம்தான் வழிகாட்டியாக இருக்கிறது, அப்படி வாழ்ந்துகாட்டிய பெருந்தகை எங்கள் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்று தமிழ்மறை பாடியதற்கு ஏற்ப வாழ்ந்துகாட்டியவர் எங்கள் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.

புத்தன் போதித்தது போல மண்ணாசை, பொன்னாசை, மக்களாசை அனைத்தையும் துறக்கவேண்டுமென்றார், அதோடு பதவியாசையையும் துறந்த துறவி நமது ஐயா என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தலைமுறை பிள்ளைகளுக்கு நான் சொல்வது ,இவர்கள் சாதிய சிமிழ் கொண்டு அவரை மூடிவிடலாம் என்று நினைக்கிறார்கள். நீங்கள் அதைத் திறந்து, அவரை வாசித்து, அவருடைய வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

ஐயாவினுடைய நினைவைப்போற்றுகிற இந்த நாளில் அவர் கொண்டிருந்த உயர்ந்த இலட்சியத்தை, எங்கள் தாய்நிலம் எவரிடத்திலும் அடிமைப்பட்டுவிடக்கூடாது, எங்கள் உயிரினும் மேலானது எங்கள் உரிமை. இந்தக் கோட்பாடுகளைக் கொண்டு அவர்கள் வழிவழியே நடந்து எமது இனத்தின் உரிமையையும் , எங்கள் நிலத்தையும் பாதுகாப்போம் என்று உறுதியேற்பதுதான் எங்கள் ஐயா தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு நாங்கள் செய்கின்ற உண்மையான வீரவணக்கமாக, புகழ்வணக்கமாக, மலர்வணக்கமாக, சுடர்வணக்கமாக இருக்க முடியும்.

எனவே, இளையதலைமுறை பிள்ளைகள் இன்றிலிருந்தாவது நமது ஐயாவின் வரலாற்றைப் படியுங்கள். ஏனென்றால் ஒவ்வொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது. வீழ்ந்துவிட்ட தேசிய இனங்கள் வரலாற்றிலிருந்துதான் மீள்எழுச்சி கொள்ள முடியும். நாம் வீழ்ந்துகிடக்கிறோம். எழுவதற்கு நமது ஐயா ஆகச்சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள். என் அன்புக்குரிய தம்பி , தங்கைகள் அதை எடுத்து படிப்பதன் வாயிலாக ஐயாவுக்கு ஆகச்சிறந்த புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
[WRGF id=107628]

 

முந்தைய செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி.பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்